பிரதமர் மோடி இரங்கல்
வாஷிங்டன், டிச. 16–
பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசை கச்சேரிகளிலும் பங்கேற்றுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசேன் தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக நேற்று இரவு தகவல் வெளியானது.
ஜாகிர் உசேன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
மோடி, கமல் இரங்கல்
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய மேதையாக அவர் நினைவு கூரப்படுவார். அவர் தனது இணையற்ற தாளத்தால் கோடிக்கணக்கானவர்களைக் கவர்ந்து தபேலாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம், உலகளாவிய இசையுடன் இந்திய பாரம்பரிய மரபுகளை தடையின்றி கலக்கினார். இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக மாறினார். அவரது சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மற்றும் ஆத்மார்த்தமான இசையமைப்புகள் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை ஒரே மாதிரியாக ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலக இசை சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜாகிர் உசைன் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ஜாகீர் பாய் சீக்கிரமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆனாலும் அவர் நமக்கு கொடுத்த காலங்களுக்காகவும் அவருடைய கலையின் வடிவத்தை அவர் நமக்கு விட்டுச் சென்றதற்காகவும் நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
உஸ்தாத் ஜாகிர் உசேன் 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை பிரபல இசைக் கலைஞர் அல்லா ராக்கா. மகனுக்கு 3 வயது முதலே தபேலா கற்பித்தார். பிறவி மேதையான ஜாகிர் உசேன் 5வது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார்.
இளமைப் பருவம் மும்பையிலேயே கழிந்தது. செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ‘என் அடிச்சுவட்டில் தபேலா வாசித்தாலும், உனக்கென்று தனியான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்’ என்றார் தந்தை. அவரது ஆசைப்படியே, தபேலா இசையில் தனி முத்திரை பதித்தார்.
11 வயதில் இசைப் பயணம்
இசைப் பயணம் மேற்கொள்வதை 11 வயதில் தொடங்கினார். 1970-ல் இசை நிகழ்ச்சி நடத்த அமெரிக்கா சென்றார். அதுமுதல் இவரது சர்வதேச இசைப் பயணம் தொடங்கியது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இவரது இசை ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு 150-க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
‘லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்டு’ என்ற இவரது முதல் இசை ஆல்பம் 1973-ல் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆல்பங்களை வெளியிட்டார். இவரது ‘மேக்கிங் மியூசிக்’, கிழக்கு – மேற்கு பியூஷன் வகையின் தலைசிறந்த ஆல்பமாக கருதப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் கூட்டாக சேர்ந்து பல இசைக் குழுக்களை நிறுவியவர். ஹாங்காங் சிம்பொனி, நியூஆர்லியன்ஸ் சிம்பொனி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளார். அமெரிக்க இசைக் கலைஞர் பில் லாஸ்வெல்லுடன் இணைந்து ‘தபேலா பீட் சயின்ஸ்’ என்ற பிரம்மாண்ட இசைக் குழுவை நிறுவினார்.
‘வானப்பிரஸ்தம்’ என்ற மலையாளத் திரைப்படத்துக்கு இசையமைத்து, அதில் நடித்தார். இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழா, தேசிய திரைப்பட விருது விழா ஆகியவற்றில் இது விருதுகளைக் குவித்தது.
‘இன் கஸ்டடி’, ‘தி மிஸ்டிக் மஸார்’ உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல திரைப்படங்கள், ஆவணப் படங்களிலும் தனியாகவும் பல்வேறு இசைக் குழுவினருடன் சேர்ந்தும் இசையமைத்துள்ளார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஜாகிர் அண்ட் ஹிஸ் ப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும், ‘தி ஸ்பீக்கிங் ஹேண்ட்: ஜாகிர் உசேன் அண்ட் தி ஆர்ட் ஆப் தி இந்தியன் டிரம்’ ஆவணத் திரைப்படமும் பிரபலமானவை.
பத்மஸ்ரீ விருதை 37 வயதில் பெற்றார். 1992-ல் ‘கிராமி’ விருது பெற்றார். தாளவாத்தியப் பிரிவுக்கு முதன்முதலாக வழங்கப்பட்ட விருது இது. மீண்டும் 2009-ம் ஆண்டிலும் ‘கிராமி’ விருது பெற்றார். பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். பாரம்பரிய இசைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் கலை மற்றும் பண்பாட்டு பெலோஷிப் விருதையும் இவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.