இவ்வளவு பெரிய குடும்பம். எவ்வளவு பணக்காரர்கள். இவர்கள் போய் இப்படி பத்திரிக்கை அடித்திருக்கிறார்களே? அதுவும் அவர்களின் பெண் குழந்தைக்கு திருமணம் விமர்சையாகக் கொண்டாட வேண்டாமா? சாணிக் காகிதம் போல இருக்கே இந்த பத்திரிக்கை. அவர்கள் மரியாதை என்ன ஆவது? என்று புலம்பித் தள்ளினார் மாலன் .
அந்தப் பத்திரிக்கையைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார். தங்கள் அன்புள்ள தனசேகரன் என்றும் மனைவி உறவினர்கள் பெயர் எல்லாம் இருந்தன.
” இவ்வளவு பெரிய குடும்பத்தைச் சார்ந்த இவர்கள் இப்படிப் பத்திரிக்கையை அடிப்பதா? “
என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டே இருந்தார் மாலன்.
” என்ன உங்களுக்கு பிரச்சனை? அது அவர்களுடைய இஷ்டம். உங்களை மாதிரி படாேபடமா செலவு பண்ணி அதை ஒன்றும் இல்லாமல் ஆக்குறதுக்கு அவங்க ஒன்னும் முட்டாள் இல்ல. அறிவாளி. நம்ம பையனுக்கு ஒரு பத்திரிகை 200 ரூபாய்க்கு அடிச்சோம் . காஸ்ட்லியா இருந்தது. ஆனா, அது எங்க கெடந்ததுன்னு பார்த்தீங்கள்ள?
“அத இப்ப ஏன் பேசுற?”
ரோட்டில தூக்கிப் போட்டு இருந்தாங்க. அத்தனை ரூபாய்க்கு நாம பத்திரிக்கை அடிச்சு என்ன பிரயோஜனம்? தகவல் மட்டும் தான சொல்லணும். இன்னாருக்கு இன்னார் கல்யாணம் பண்ண போறாங்க .இந்த இடம். இந்த நேரம் அதுதான் .நாம சொல்லணும் .அது இல்லாம ஆடம்பரமா பத்திரிகை அடிச்சு என்ன செய்ய ? ” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் மாலனின் மனைவி சீதா..
” அது சரி இன்னொரு விஷயம் சொன்னா நீங்க தப்பா நினைப்பீங்க.நாம வெறும் பத்திரிகை தானே கொடுத்தோம்? ஆனா அவங்க என்ன பண்ணாங்க தெரியுமா? அவ்வளவு பெரிய பணக்காரர் இப்படி பத்திரிக்கை அடிச்சு கொடுத்தாங்கன்னு வருத்தப்படுறீங்க .இங்க வாங்க “என்று கூட்டிப் போன சீதா ஒரு வெள்ளித் தட்டை எடுத்துக் காட்டினாள்.
” இது என்ன?”
” நீங்க சொன்னீங்கல்ல சாணிக்காயிதம் மாதிரி பத்திரிக்கை அடிச்சிருக்காங்கன்னு.அது தகவல் மட்டும் தான் .கல்யாணம் முடிஞ்ச மறுநாள் தூக்கி தூர போட்டுருவாங்க. ஆனா, இப்ப இவங்க கொடுத்துட்டு போய் இருக்கிற இந்தத் தட்டு நமக்கு மாதிரி எல்லாருக்கும் பயன்படுற மாதிரி நிறையப் பேருக்கு பயன்படுமில்ல “
என்று சீதா சொல்ல…
நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருந்தது மாலனுக்கு.
#சிறுகதை