சிறுகதை

பத்திரம் – ராஜா செல்லமுத்து

லூர்து எப்போதும் தூங்குவதற்கு முன்னால் மேல் மாடியில் இருக்கும் மகள் டயானாவைக் கீழே இருந்தே கூப்பிடுவார்.

டயானா கதவடைச்சிட்டியா? ஜன்னல் அடைச்சியா? பத்திரம்….பத்திரம் என்று ஒவ்வொரு நாளும் தன் மகளிடம் பேசிக்கொண்டே இருப்பார்.

டயானாவும் மேல் மாடியில் இருந்து , அடைச்சாச்சுப்பா. பத்திரமா இருக்கேன் என்று சொல்ல

சரி ….நன்றி…. குட் நைட் என்று தன் பங்குக்கு சொல்லிவிட்டு படுக்க போய்விடுவார்.

இப்படி ஒவ்வொரு இரவும் அவர் உரக்க கத்துவது, அந்த தெருவில் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் கேட்கும்.

ஏன் இந்த ஆளு இப்படி கத்துறான்? பக்கத்துல போய் சொல்ல வேண்டியது தானே ? மேல மாடி இருக்கு அப்படிங்கிற விசயம் இந்த தெருவுல இருக்கவங்களுக்கு தெரியுனும்னு பெருமையா நினைக்கிறேனா?

லூர்து என்னைக்காவது ஒரு நா நல்ல ஒரு அனுபவம் கிடைத்தா தான் திருந்துவான் என்று அந்த தெருவாசிகள் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இது எதையும் சட்டை செய்யாமல் ஒவ்வொரு நாளும் பத்து மணி ஆனால் மேல் மாடியில் இருக்கும் தன் மகளை அழைப்பதும் பத்திரமாக ஜன்னல் கதவை பூட்டிக்கொண்டு இரு சொல்வதும் வாடிக்கையாக இருந்தது.

தெருவாசிகள் அதற்குமேல் எதுவும் பேசுவதில்லை.

வழக்கம்போல தன் மகளிடம் டயானா பத்திரம்…. பத்திரம்…. என்று சொல்லியபடியே இருப்பான்.

பதிலுக்கு டயானா அப்பா கதவை சாத்திட்டேன் என்று பதில் சொன்னாள்.

இதை அந்த வழியாக வந்த இரண்டு திருடர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

என்ன மேலே பொண்ணு இருக்கா போல. அதான் இந்தாளு கத்திக்கிட்டு இருக்கான் என்று நினைத்துக் கொண்டார்கள்.

மறுநாளும் அந்தத் திருடர்கள் அந்த தெரு வழியாக வந்தார்கள்.

அதேபோல கத்திக்கொண்டே இருந்தார் லூர்து.

பதிலுக்கு டயானாவும் கத்தினாள்.

இதுவே திருடர்களுக்கு வாய்ப்பாக போய்விட்டது. அந்த இரண்டு திருடர்களும் பேசிக்கொண்டார்கள். அப்போ கீழே வீட்டுல அப்பா – மத்தவங்க இருக்கிறாங்க; மேல தனியா மகள் இருக்கா போல. மாப்ள இன்னைக்கு நம்முடைய வேலையைக் காட்ட வேண்டியதுதான் என்று பேசி பேசிக்கொண்டார்கள்.

வழக்கம்போல மறுநாளும் அந்த இரவு, மகளிடம் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி பேசுவதும் மகளும் பதிலுக்கு சொல்வதும் குட் நைட் என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்.

ஆனால் ஒரு மணி, இரண்டு மணி நடுநிசி வாக்கில் அந்தத் திருடர்கள் பக்கத்து மாடியில் இருந்து குதித்து படி வழியாக உள்ளே இறங்கிப் போய் கதவை தட்ட

யார் அது? என்று கேட்டபடி டயானா கதவைத் திறந்தாள். அதற்குள் திருடர்கள் டயானாவின் வாயைப் பொத்திக்கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்

டயானா மூச்சு விடவில்லை ; வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அத்தனை சகை பொருள்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

திருடர்கள் போன பிறகுதான் அவளால் கத்த முடிந்தது.

குய்யோ முறையோ என்று அடித்துக்கொண்டது மேலே வந்தார் லூர்து : என்னாச்சும்மா? என்று கேட்டபொழுது…

திருடங்க திருடிவிட்டார்கள் அப்பா என்று அரக்கப்பரக்க சொன்னாள் டயானா அழுதுகொண்டே . இதைக் கேட்ட லூர்துக்கு ரொம்பவே ஒரு மாதிரியாகப் போனது.

என்ன இது கீழ தான் நாம இருக்கம். எப்படி நடந்தது இது? குழம்பினார் லூர்து

மறுநாள் காலை அந்த தெருமுழுவதுக்கும் லூர்து வீட்டில் திருட்டு போனது தெரிய வந்தது.

எப்படி அந்தத் திருடர்கள் வந்தார்கள்? என்று ஆளுக்கு ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தார்கள்

ஒரே ஒரு நபர் மட்டும் சொன்னார்:

லூர்து தான் இந்தத் திருட்டுக்கு வழிகாட்டி இருக்கிறார் என்று சொன்னார்.

இந்தத் திருட்டுக்கு மொத்த காரணமும் நீங்கதான் என்று சொன்னபோது அவருக்கு தூக்கி வாரி போட்டது.

இந்தத் திருட்டுக்கு முழுக்காரணம் நீங்கள்தான் என்று அந்தத் தெரு மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

உண்மை தான் ஒவ்வொரு நாளும் நீங்கதானே கீழே இருந்து கத்துவீங்க.நீங்க உங்க பொண்ணுகிட்ட கத்தினது திருடர்களுக்கு சாதகமா போச்சு.

மேலே பொண்ணு தான் இருக்கிறா? அப்படிங்கறது தெரிஞ்சுகிட்டு அது தான் திருடர்கள் மேல வந்து திருடி இருக்காங்க.

இனிமேலாவது ஒழுங்கா போன் பண்ணி பேசுங்க .இல்ல நேரப் போய் சொல்லிட்டு வாங்க என்று அந்த தெருவாசிகள் லூர்துவை எச்சரித்தார்கள்

அன்றிலிருந்து லூர்து எந்த சத்தமும் போடுவதில்லை. நேராகப் போய் மாடியில் பெண்ணை பார்த்து விட்டு, கதவை பூட்டிவிட்டு தான் வருகிறார்.

அன்றிலிருந்து அந்த தெரு முழுக்க லூர்துவின் சப்தமில்லாமல், அமைதியாகியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *