செய்திகள்

பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்வு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு

சென்னை, அக். 25–

வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்தப்படுவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிய வருகின்றது.

வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, என பல்வேறு காரணங்களால் தொழில் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த கால கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும்.

இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். தமிழக முதலமைச்சர் இவற்றை கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென வணிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *