சென்னை, ஜூன் 27–-
பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களை அதிக நேரம் காக்க வைக்க கூடாது என்று அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (முத்திரை) மற்றும் தனி துணை ஆட்சியர்களின் (முத்திரை) பணி சீராய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–-
இந்த கூட்டத்தில் கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்டவேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம். பத்திரங்கள் பதியப்படும் போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இடைத்தரகர்களுக்கு இடமில்லை
தவறான செய்திகள் பரப்புவதை தடுக்கும் வகையிலும், நேர்மையான முறையில் பதிவு நடைபெறும் வகையிலும் இடைத்தரகர்கள் பத்திரப்பதிவு நடைபெறும் இடத்தில் இருக்கக்கூடாது என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் பத்திரப்பதிவுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பத்திரப்பதிவுத்துறையில் காலியாக உள்ள 85 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அவருடைய மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 நாட்களில் புகார் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் ஒரே சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மோதல் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பாகுபாடின்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கோவில் திருவிழா முடிந்த மறுநாள்தான் நான் அங்கு சென்றேன். நான் செல்லும்போது அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் (எடப்பாடி பழனிசாமி) சொல்லும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.