சென்னை, ஜூலை 9–-
பத்திரப்பதிவுத்துறையின் சேவைகளுக்கான கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-–
தமிழக பத்திரப்பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பதிவுத்துறையால் வழங்கப்பட்டுவரும் ஆவண பதிவு மற்றும் பதிவு செய்யப்படும் ஆவணத்தை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொறுத்து கட்டண விகிதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பதிவுச்சட்டம் 1908–-ன் பிரிவு 78-ல் கட்டண விவர அட்டவணையில் உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவண பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்துக்கு பதிவு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வரும் 10–-ந் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாடு பத்திர எழுத்தர் நலநிதிய குழுவில் உறுப்பினர்கள் நியமிப்பது குறித்த கருத்துருவை பதிவுத்துறை தலைவர் அரசுக்கு அனுப்பியுள்ளார். அதை ஏற்று, தமிழ்நாடு பத்திர எழுத்தர் நலநிதிய குழுவில் எஸ்.பத்மநாபன் (திருப்பூர்), ஜி.கண்ணன் (மதுரை), ஆர்.முத்துக்குமார் (ராமநாதபுரம்), ஜி.சிவசங்கரராமன் (தூத்துக்குடி) ஆகிய பத்திரப்பதிவு எழுத்தர்கள் உறுப்பினர்களாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு பா.ஜோதி நிர்மலாசாமி கூறியுள்ளார்.