செய்திகள்

பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்ட வேண்டும்

சென்னை, மார்ச் 8–

பதிவு செய்த நாளிலேயே பத்திரங்களை திரும்ப வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறு பதிவாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தினார்.

பதிவுத் துறையின் வருவாய் இலக்கான ரூ.11,513 கோடியை விரைவில் எட்டுமாறும் கேட்டுக் கொண்டார்.

பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் கா.பாலசந்திரன், அனைத்து கூடுதல் பதிவுத்துறைத் தலைவர்கள், அனைத்து மண்டல துணைத்தலைவர்கள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில்,

2018–19 நிதியாண்டில் பதிவுத் துறையின் வருவாய் இலக்கு ரூ.11,513 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருவாய் இலக்கினை அடைவதற்காக தினசரி அடிப்படையில் நிலுவை ஆவணங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளையும் கையாண்டு வருவாய் இலக்கினை அடைந்திட வேண்டும் என்றார்.

பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ என்ற நவீன மென்பொருள் மூலம் இணையவழி ஆவணப் பதிவு தற்போது நடைமுறையில் உள்ளது. பதிவு செய்த அன்றே பத்திரங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது, சென்னையில் 50%, வேலூரில் 64%, தஞ்சையில் 65%, மதுரையில் 66% பத்திரங்கள் பதிவு செய்த நாளில் திரும்ப வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை 90%-க்கு மேல் அதிகரிக்குமாறு பதிவாளர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

‘‘மாநிலம் முழுவதும் 19,877 ஆவணங்கள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளன. அவற்றை விரைவில் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் 5,953 ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. நிலுவை ஆவணங்களில் தன்மை நிர்ணயிக்கும் பொருட்டு 134 ஆவணங்களும் மதிப்பு நிர்ணயித்திற்காக 586 ஆவணங்களும் வருவாய்த்துறை ஆவணங்கள் சரி பார்க்க சென்னையில் மிக அதிகளவில் 1,060 ஆவணங்களும் நிலுவையில் உள்ளன.

அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்.

முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து விரைவு நடவடிக்கை மேற்கொண்டு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *