சிறுகதை

பதவி உயர்வு வந்தது – மு.வெ.சம்பத்

சுரேஷ் சென்னை எக்மோர் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கினான். மிகவும் மகிழ்வாக இருந்த அவன் தனது மனைவியிடம் தனது பதவி உயர்வு வந்ததைக் குறித்து பகிர்ந்த கொள்ள மிகவும் ஆவலுடன் விரைவாக வீடு செல்ல ஆயத்தமானான். இப்போது எதை வாங்கி மனைவிக்குக் கொடுப்பதென ஒரு பக்கம் சிந்தனையிருந்தாலும் மனைவியின் விருப்பத்திற்கிணங்க வாங்குவதே சரியாக இருக்குமென முடிவு செய்து வீட்டிற்கு செல்ல விரைந்தான்.

தானியங்கி படிக்கட்டில் பயணித்தவனை சுரேஷ் என யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தவன் ராஜாவைக் கண்டு வணக்கம் என்றான்.

ராஜா சுரேஷிடம் வாழ்த்துக்கள் பதவி உயர்வு கிடைத்ததற்கு என்றான் . சுரேஷ் அதற்குள் உங்களுக்குத் தெரிந்து விட்டதா? என்று கேட்டு நன்றி எனக் கூறினான். ராஜா சுரேஷை ஒரு காப்பி அருந்திவிட்டுச் செல்லலாம் என்ற அழைத்தான்.

சுரேஷ் சரியெனக் கூறினான்.

இருவரும் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு இருக்கையில் அமர்ந்தனர். இரண்டு காப்பி என ராஜா ஆர்டர் செய்தான்.

மேலும் சுரேஷிடம் சென்னை, திருச்சி அல்லது கோவை இவற்றுள் ஒன்றுதான் உங்களுக்கு கிடைப்பதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டதாகக் கூறினான்.

சுரேஷ் எது வந்தாலென்ன எனக்கூறி விட்டு காப்பியைக் குடிக்கலானான்.

அப்போது அங்கு வந்த மணி இருவரையும் பார்த்து வணக்கம் கூறி விட்டு சுரேஷிடம் வாழ்த்துக்கள் தெரிவித்தான். உங்களுக்கு அநேகமாக திருச்சி தான் கிடைக்குமென மணி கூற சுரேஷ் எனது மனைவியின் ஊர் திருச்சி தான். அவள் மிகுந்த மகிழ்வடைவாள் என்றான். சிறிது நேரம் பலப் பல விஷயங்களைப் பேசி விட்டு விடைபெற்றனர்.

சுரேஷ் பிறகு மாநகரப் பேருந்து ஒன்றின் மூலம் வீட்டிற்கு பயணம் செய்தான். பேருந்தில் செல்லும் போது மனைவியிடம் எவ்வாறு கலந்து பேசுவது என்பது பற்றிய ஒரு ஒத்திகையுடன் பயணித்தான்.

தனக்கு திருச்சி மாநகரில் போஸ்டிங் கிடைக்குமென கூறுவதா அல்லது ஆர்டர் வந்ததும் கூறலாமா என்ற பல யோசனையில் ஆழ்ந்தான்.

சுமார் 40 நிமிட பயணத்திற்குப் பின் தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினான். விரைவாக வீடு நோக்கி சென்ற சுரேஷ் வீட்டையடைந்ததும் அமுதா என தனது மனைவியை அழைத்தான். உள்ளேயிருந்து வரேன் என்ற குரல் முன்னால் வந்தது.

இந்த நேரத்தில் அலுவலகத்தில் சுரேஷின் இருக்கைக்கு முன்னால் வந்த உயர் அதிகாரி என்ன சுரேஷ் உடம்பு ஏதும் சரியில்லையா, தேவையென்றால் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் சுரேஷ் சுதாகரித்துக் கொண்டு இல்லை சார், நேற்று வேலைப் பளுவில் சற்று அசதியென்றதும் சரி, சரி நேற்று நீங்கள் சென்ற கொரேனாப் பகுதிகளில் எத்தனை பேருக்கு சோதனை நடந்தது, எத்தனை பேருக்கு தொற்று இருந்தது போன்ற விவரங்களை உடனே தாருங்கள், இன்னும் அரை மணியளவில் சுகாதாரத்துறை செயலாளர் கைப்பேசியில் அழைத்தால் உடனே கொடுக்க வேண்டுமெனக் கூறி விட்டு நகர்ந்தார்.

இதுகாறும் தனது பதவி உயர்வு பற்றி தான் கண்டது ஒரு கனவு தானா என்று வெறுப்புடன் இருக்கையிலிருந்து எழுந்து முகத்தைக் கழுவச் சென்றான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *