சிறுகதை

பதவி உயர்வு – ரமேஷ்குமார்

” முரளி சார், முதலாளி உங்க கிட்ட ஏதோ பேசனுமாம்.அவருடைய ரூமுக்கு உங்களை வரச்சொன்னார்.போங்க”

பியூன் சொன்னதும் பைல்களை அப்படியே போட்டு விட்டு எழுந்து முதலாளியின் அறையை நோக்கி நடந்தான் முரளி.

முதலில் உட்காரச்சொன்னார் முதலாளி.

” நம்ம ஹைதராபாத் பிராஞ்சுக்கு ஒரு திறமையான மேனேஜர் தேவைப்படறார்.இப்ப வேலை பார்க்கிற தெலுங்குக்காரர் சரியில்ல.எனக்கு உங்களோட திறமை ரொம்ப பிடிச்சிருக்கு.

அதனால இதைக்கேட்கிறேன்.

உங்களுக்கு கிளர்க் போஸ்ட்டிலிருந்து மேனேஜரா பதவி உயர்வு அளித்து ஆவடியிலிருந்து ஹைதராபாத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணினால் நீங்க அதை ஏத்துக்கத்தயாரா? தங்குவதற்கு வாடகை இல்லாத வீடும் உண்டு”

பதவி உயர்வு என்பதை நினைக்கும் போது சந்தோஷமாய்இருந்தது. ஆனால் வேறு மாநிலம் என்பது தான் அவனை பதில் பேச முடியாமல் செய்தது.

” என்ன முரளி…ஒண்ணும் பேச மாட்டேங்கிறீங்க.புது இடம் வேற மாநிலம்னு தயக்கமா இருக்கா? நான் கட்டாயப்படுத்தலை.டெல் மீ”

” சார் அது வந்து…என் மனைவிகிட்ட கலந்து பேசிட்டு வந்து சொல்றேனே”

“ஓ.கே.முரளி.அருமையான வாய்ப்பு.யூஸ் பண்ணிக்குங்க.யூ மே கோ”

மனைவி ராகவிக்கு இதில் விருப்பமில்லை.புலம்பினாள்.இதை எப்படி முதலாளியிடம் சொல்வது என்று குழம்பிய முரளி அவருக்கு பதில் சொல்வதை தள்ளிப்போட்டான்.

அன்று. மார்க்கெட்டுக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் தன்

கல்லூரி தோழி உமாவை சந்தித்தாள் ராகவி.

” எங்கே உமா இந்தப்பக்கம்?”

” நானும் என் மகனும் ஹிந்தி

டியூஷன் கிளாஸ் முடிச்சிட்டு இப்ப வீட்டுக்கு போயிட்டிருக்கோம்”

” என்னது, ஹிந்தி டியூஷனா?”

” ம்.என் வீட்டுக்காரர் மிலிட்டரியில் இருக்கார்.இப்ப

காஷ்மீரில் டியூட்டி.அடுத்த வருஷம் டெல்லிக்கு ஹவில்தாரராக மாற்றிடுவாங்க.அப்ப எங்களை அங்க கூப்பிட்டுக்குவார்.அதான் நாங்க ஹிந்தி கத்துக்கிட்டிருக்கோம்”

அன்று இரவு முரளியிடம் ராகவி,

” ஸாரிங்க.நீங்க மேனேஜர் பதவியை ஏத்துக்குங்க” என்றவள் தோழி உமாவின் கதையை சொல்லி,

” நாட்டுக்காக ஒருத்தர் மனைவி குழந்தைகளை

பிரிந்து வாழ்ந்திட்டு அடுத்த வருஷம் ஒண்ணு

சேரப்போறார்.அதை

நினைக்கும் போது என் மனசு

மாறிடுச்சுங்க.நானும் நம்ம குழந்தையோட உங்க கூட ஹைதராபாத்துக்கு வர தயார்ங்க” என்றாள்.

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து

முத்தம் கொடுத்தான்

‘மேனேஜர்’ முரளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *