ஈரோடு, பிப். 27–
ஈரோடு இடைத் தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் எச். கிருஷ்ணனுண்ணி கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஈரோடு மாநராட்சிக்குட்பட்ட சம்பத் நகர், ஸ்ரீஅம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் எச். கிருஷ்ணனுண்ணி தனது துணைவியார் கே.எம். பிரசிதா சபரியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. 5 இடங்களில் மட்டும் மாதிரி வாக்குப்பதிவின்போது, இயந்திர கோளாறுகள் ஏற்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சுமூகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், வெயிலின் தாக்கம் பாதிக்காமலிருக்க அனைத்து வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் வாக்குச்சாவடிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்பட்டால் ரிசர்வ் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 சதவீத வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம், 20 சதவீத கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஏதேனும் தவறுகள் நடைபெறும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிமுறைப்படி, தொடர்புடைய புகார்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் இயங்கி வரும் கண்காணிப்பு அறையில் 238 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.