செய்திகள் நாடும் நடப்பும்

பதட்டத்தை ஏற்படுத்தும் சீனாவின் பிரம்மாண்ட போர்க் கப்பல்

தகர்க்க முடியா அரண்; ரஷியாவுடன் நட்பு: நமது பாதுகாப்பிற்கு தெம்பு


ஆர்.முத்துக்குமார்


நமது எல்லை பாதுகாப்பிற்கு இயற்கை தந்து இருக்கும் ஓர் அதிமுக்கிய அம்சம் நம்மை சூழ்ந்து மூன்று எல்லை பகுதிகளிலும் கடல் இருப்பது தான்! ஒரு பகுதியில் மட்டும் நிலம் என்பதால் அப்பகுதியில் எதிரிகளின் ஊடுருவல் தீவிரமாக கண்காணித்திட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

எளிதில் ஓர் அளவு நிலப்பகுதி வழி ஊடுருவல்களை தடுத்தும் விடுகிறோம்.

ஆசிய பகுதியில் பெருவாரியான நாடுகள் தீவுகளாகவோ, தீபகற்பங்களாக இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொள்வது திடீர் என நடந்து விடாது!

எல்லைப் பிரச்சனைகள் மீன் பிடிக்கச் செல்பவர்களுக்கு இருக்கலாம் ஆனால் அது பெரிய ராணுவ தாக்குதல்களாக மாறும் அபாயக் கட்டத்தை இதுவரை எட்டியது கிடையாது.

ஆனால் இந்த சமநிலை பாதிப்புகளுக்கு சீனா வித்திட வரும் அபாயம் எழுந்துள்ளது. அந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் புதிய போர் கப்பல் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு கடலில் சோதனை ஓட்டங்களையும் சென்ற மாதம் துவங்கி விட்டது. சீனா 80 ஆயிரம் டன் எடையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டில் தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இதற்கு ஃபியூஜியன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் சீன கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. மிக நவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பலை சீனா தயாரித்துள்ளதால் சீன கடற்படையில் இந்த கப்பலின் வரவு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

ஃபியூஜியன் கப்பல் சீன கடற்படையில் இணைந்தபின் இந்திய – பசிபிக் கடல் பகுதியில் அதன் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் பல விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

தற்போது 3 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை சீனா வைத்துள்ளது. அதன் பலம் அதிகரித்து வருவது இந்திய கடற்படைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகிய இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ளன. இந்திய கடற்படைக்கும் மிக பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர் கப்பல்கள் தேவை. சீனாவின் ஃபியூஜியன் போன்ற கப்பலை தயாரிக்க ரூ.56,000 கோடி செலவாகும். அதில் உள்ள போர் விமானங்களை வாங்க ரூ.66,000 கோடி செலவாகும்.

ஆனால் தற்போதைக்கு ஐஎன்ஸ் விக்ராந்த் போன்ற சிறிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிப்பதை மட்டுமே மத்திய அரசு பரிசீலிக்கிறது. தற்போது அமெரிக்கா, சீனா, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ரஷ்ய கடற்படைகளில் மட்டுமே விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளன. இதில் அமெரிக்காவிடம் மட்டுமே 11 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் உள்ளன. மற்ற நாடுகளிடம் ஒரு சில விமானம் தாங்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன.

மத்தியில் அடுத்து வரும் அரசுகள் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பல் தயாரிக்க ஒப்புதல் அளித்தால், சீன கடற்படையுடன் போட்டி போடும் விதத்தில் இந்திய கடற்படையும் வலுப்பெறும்.

அதாவது கப்பலை நமது கடல் எல்லையை தாண்டி நிறுத்திவிட்டு நொடிப்பொழுதில் போர் விமானத்தை ஏவி நம் மீது தாக்குதல் நடத்தும் வல்லமையை சீனா பெற்று விட்டது.

இதைக் கண்டு அச்சப்படாமல் இருக்க முக்கிய காரணம் நாம் ரஷியாவின் உதவியுடன் வடிமைத்துள்ள ‘பிரம்மோஸ்’ ஏவுகனைகள் தான்.

இவை ஒலியை விட ஒன்பது மடங்கு அதிவேகமாக செல்லும் சக்தி பெற்று இருக்கிறது. எதிரி போர்க் கப்பலில் இருந்து நம் மீது வான்வெளி தாக்குதல் ஏவப்பட்ட மறு நொடியில் நமது பாதுகாப்பு அரணில் முக்கிய பங்காற்றும் ‘பிரம்மோஸ்’ தானே ஏவப்பட்டு நம் மீது ஏவப்பட்ட ஏவுகணையை நடுவானிலேயே தகர்த்து விடும்.

‘பிரம்மோஸின் வேகம் ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தை மேலும் அதிகரித்து கிட்டதட்ட ஒன்பது மடங்கு வேகத்தை சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளோம்.

மேலும் நிலத்தில் இருந்து ஏவப்படுவதுடன் நடுக்கடலில் கப்பலில் இருந்தும் ஏவும் திறனையும் பலமுறை வெற்றிகரமாக சோதித்து விட்டோம்.

ஆக நமது கடல் பகுதி எல்லையில் ஆபத்துக்கள் ஏதும் எழாது. அதைத் தாண்டி யாரேனும் தாக்கத் துணிந்தால் நமது அரணை வீழ்த்த முடியாத சக்தியை ரஷியா நமக்கு தந்து இருப்பதை மறந்து விடக்கூடாது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *