செய்திகள்

பதக்கத்துடன் வாருங்கள்: இந்திய ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு தெண்டுல்கர் வாழ்த்து

புதுடெல்லி, ஜூலை 21–

பதக்கத்துடன் வாருங்கள் என்று இந்திய ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க 26 வீரர், வீராங்கனைகள் உள்பட 47 பேர் கொண்ட இந்திய அணி நாளை மறுநாள் புறப்பட்டு செல்கிறது. இந்திய தடகள அணியினருக்கான வழியனுப்பு நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. இதில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், பதக்கம் வெல்ல வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் என்று நிறைய பேர் சொல்வார்கள். ஆனால் நான் சொல்லும் செய்தி என்னவென்றால் தோல்வி எதிராளிக்குரியதாகவும், வெற்றி உங்களுடையதாகவும் இருக்க வேண்டும். பதக்கம் வெல்ல வேண்டும் என்று பயணியுங்கள். நீண்ட காலமாக நழுவி வரும் ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்ப வாழ்த்துகள். உங்களுடைய கனவை துரத்துவதை நிறுத்தாதீர்கள். அந்த கனவு உங்களுடைய கழுத்தை பதக்கம் அலங்கரிப்பதாகவும், தேசிய கீதம் இசையுடன், நமது தேசிய கொடி உயரத்தில் பறப்பதாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய திறமையில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் காரணமாக உங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இது நல்ல விஷயமாகும். மக்களிடம் இருந்து வரும் அழுத்தத்தையும், எதிர்பார்ப்பையும் அனுபவிக்க வேண்டும். அத்துடன் அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நேர்மறையான சக்தியாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *