நாடும் நடப்பும்

பண வீக்கத்தை தடுக்க கடனுக்கான வட்டி மேலும் உயரும் அபாயம்!


ஆர்.முத்துக்குமார்


கொரோனா பெரும் தொற்று ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியும், கடந்த 2 மாதங்களாக உக்ரைனில் போர் பதட்டமும் உலக வர்த்தகத்தை நிலைகுலைய வைத்து வருகிறது. அதன் விளைவாக விலைவாசி உயர்வு பண வீக்கத்தை ஏற்படுத்தியும் வருகிறது.

பண வீக்கத்தை சமாளிக்க ஒரே வழி, கடன் வட்டி விகிதத்தை ஏற்றுவது என்பதை அறிவோம். கடந்த சில வாரங்களாகவே பொருளாதார நிபுணர்கள் உலகெங்கும் வட்டி விகித உயர்வு அறிவிக்கப்படும். குறிப்பாக இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் வட்டி விகித உயர்வை 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக் காட்டினார்.

ஆனால் நேற்று அமெரிக்க மத்திய வங்கி 50 புள்ளி வட்டி அதிகரிப்பை அறிவித்தது. உண்மையில் இன்றைய தேவை 75 புள்ளி உயர்வு என்றும், பொருளாதார நிலை கடுமையாக உள்ளதால் 50 புள்ளி உயர்வே போதும் என்ற முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தனர்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்த அறிவிப்பு வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே முன் அறிவிப்பு ஏதுமின்றி ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் 40 புள்ளிகள் வட்டி உயர்வு என்று அறிவித்து, அதை உடனே அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இது குறுகிய கால கடனுக்கான வட்டிக்கு மட்டுமான உயர்வாகும்.

உலகப் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளதால் உற்பத்தி பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா மீது பொருளாதார முற்றுகை காரணமாக பல்வேறு சரக்கு கப்பல் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகமும், சரக்கு போக்குவரத்தும் தடை பட்டுள்ளதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் எல்லா உற்பத்திப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகிறது.

இந்த விலை உயர்வை சமாளிக்க வங்கிகளின் நிதி நிலை உறுதியாக இருந்தால்தான் கடன் தரவும், கையிருப்பு நிதி நிலையும் நன்றாக இருக்கும்.

சாமானியன் நிலை பரிதாபம்

வங்கிகளின் வருவாய் அதிகரிப்புக்கு கடன் வட்டிகளின் விகிதத்தை உயர்த்தியாக வேண்டும்! பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்றத்துடன் வங்கி வட்டி சுமையும் அதிகரித்தால் ஏழை சாமானியனின் நிலை பரிதாபமானதே!

இந்திய பொருளாதாரம் இந்த கடுமையான சூழ்நிலையில் சவால்களை சமாளிக்க முதல் கட்டமாக இப்படி திடீரென வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்க விரும்பும் குறுகிய கால கட்ட கடன்களுக்கு 40 புள்ளிகள் வட்டி உயர்வை அறிவித்துள்ளார்கள்.

ஜூன் மாதத்தில் நிதிக் கொள்கை கூட்டம் எப்போதும் போல் நடக்க இருக்கிறது. அப்போதும் வட்டிகள் உயர்வு இருக்கத்தான் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

2020 மே 22 முதலே மிகக்குறைந்த வட்டி விகிதமாக 4 சதவீதம் வட்டி என்ற கொள்கையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆக கிட்டத்கட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகே வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

இது வரை வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்றப் படாமல் இருந்ததால் தற்போதைய ஏற்றம் சற்றே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பங்குகளின் விலைகள் சற்றே சரிந்து மும்பை பங்குச்சந்தை குறியீடு 55,664 புள்ளிகளாக வீழ்ச்சியைக் கண்டது. ஆனால் வட்டி சுமை மிகக்குறைவே என்பதால், பங்கு மார்க்கெட் மீண்டு அடுத்த சில மணி நேரத்தில் 56,340 புள்ளிகளாக மீண்டு விட்டது.

புதிய முதலீடு வாய்ப்பு

தற்சமயம் பங்குகளின் விற்பனை மந்தமாகவே இருப்பதைப் பார்த்தால், பெரிய முதலீட்டாளர்கள் வர இருக்கும் நடப்புகளை கவனித்து, புது முதலீடுகள் செய்ய இருக்கிறார்கள் என்பது புரிகிறது.

இந்நிலையில், மே 3 அட்சய திருதியை தினத்தில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.9000 கோடி அளவுக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய வர்த்தகமாகும். கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்கப்படாத நிலையில், இந்த ஒப்பீடு சரியானது கிடையாது தான். ஆனால் தனி நபரின் வாங்கும் சக்தி குறையவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஆக ஜூன் மாதத்தில் உக்ரைனின் போர் பதட்டம் தணிந்து கப்பல் சரக்கு போக்குவரத்துகள் மீண்டும் சீராகி விட்டால், பொருளாதார உலகம் மீண்டும் நம்பிக்கையுடன் நடைபோட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரை கண்ணில் தென்பட ஆரம்பிக்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published.