ஜெனீவா, டிச. 6–
பணி செய்யும் இடங்களில் 22 சதவீதம் பேர் உடல் அல்லது மன நிலையிலான வன்முறையை சந்திப்பதாக, ஐநா அறிக்கை கூறுகிறது.
உலகெங்கிலும் வேலை செய்யும் இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலின் அளவை ஐ.நா சர்வதேச தொழிலாளர் அமைப்பு , லாயிட்ஸ் பதிவு அறக்கட்டளை மற்றும் கேலப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. ஆய்வில் இளைஞர்கள், புலம்பெயர்ந்தோர், பெண்களுக்கு அதிக பணியிட பாதுகாப்பின்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
ஐநாவின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு மட்டும் சுமார் 121 நாடுகளில் உள்ள 75,000 தொழிலாளர்களில் 22% க்கும் அதிகமானோர் ஏதோ ஒரு வகையான வன்முறை அல்லது துன்புறுத்தலை அனுபவித்ததாக அறிவித்துள்ளனர். இதனால், பணியாளர்களிடையே உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு அது வேலையின் தரத்தையும் அளவையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அதிக துன்புறுத்தல்கள்
ஆய்வுத் தரவுகளின்படி, வேலை செய்யும் இடங்களில் வன்முறை அல்லது துன்புறுத்தலை அனுபவித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் துன்புறுத்தல்களை அனுபவித்ததாக கூறி உள்ளனர். மேலும் 6.3% பேர் உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகிய மூன்று வடிவங்களையும் எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 8.5% பேர் உடல் ரீதியான வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிப்பதாகக் கூறியுள்ளனர். பாலினம், இயலாமை நிலை, தேசியம், இனம், தோல் நிறம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பாகுபாட்டை அனுபவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பணியாளர்களின் உழைப்பையும் வேலை அளவையும் வைத்தே, நாடுகளின் செழிப்பும் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உள்ளது. எனவே அவர்களின் வேலை செய்யும் இடத்தின் பாதுகாப்பை நிறுவனங்களும், அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும். வேலையிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம், கொள்கை மற்றும் நடைமுறைகளை உருவாக்க, இந்த ஆய்வு உதவும் என்று ஐநா ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.