செய்திகள்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: அடையாளங்களை வெளியிட தடை

மும்பை, செப். 28–

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளில், தனிப்பட்ட அடையாளங்களை வெளியிடக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு உத்தரவுகளில், இரு தரப்பினரின் தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கும் வகையில், நீதிமன்ற பதிவேடுகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் வழக்கு விவரங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை மும்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஎஸ் பட்டேல் வெளியிட்டுள்ள தனது உத்தரவில், “வழக்கு தொடர்பான உத்தரவில்/தீர்ப்பில், பெயர்களை குறிப்பிடாமல் ‘A vs B’, ‘P vs D’ என்றே எழுதப்படும் என்றும் வாதி, பிரதிவாதி இருவரின் பெயர் மின்னஞ்சல் முகவரி, மொபைல் அல்லது தொலைபேசி எண்கள், போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் (personally identifiable information -PII ) உத்தரவில் குறிப்பிடப்படாது” எனவும் கூறியுள்ளார்.

தனி அறையில் தீர்ப்பு

மேலும் அனைத்து உத்தரவுகளும் தீர்ப்புகளும் தனிப்பட்ட முறையில், தனி அறைகளில் வெளியிடப்படும் என்றும், திறந்த நீதிமன்றத்தில் வெளியிடப்படாது என்றும் கூறியுள்ளது. அதேவேளை, இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் எனவும், ஆன்லைன் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே விசாரணைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். உதவி ஊழியர்கள் (எழுத்தர்கள், பியூன்கள் ஆகியோர்), நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ள நீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இன்றி, பாலியல் வழக்கில் சபந்தப்பட்டவர்களின், தனிப்பட்ட அடையாளங்கள், வழக்கு மற்றும் தீர்ப்பு விபரங்கள், சமூக ஊடகங்கள் உட்பட எந்த ஒரு ஊடகங்களிலும் வெளியிட கூடாது எனவும் கூறியுள்ளது.

இவை ஆரம்ப கட்ட வழிகாட்டுதல்கள் மட்டுமே என்றும் தேவைக்கேற்ப திருத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள நீதிமன்றம், இந்த உத்தரவின் எந்தவொரு அம்சத்தையும் மீறுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் தெளிவு படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *