அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பணிப்பெண் அறை…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அறைகள் சொல்லும் கதைகள்- 25


ஆயிரங்கால் மண்டபத்தைப் போல் விரிந்து பரந்த வீடு. நட்சத்திரங்களைப் போல் மின்னிக் கொண்டிருக்கும் மின்சார விளக்குகள் .ஆடம்பரத்தின் ஆணிவேர் போல் அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு .நாலு வாசல்கள் இருக்கும் அந்த வீட்டில் பதினாறு கார்கள் நின்றிருக்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெரிய வீட்டில் தாயம்மாள் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தாள். எண்ணிச் சொன்னால் இருபது பேர் இருப்பார்கள் . வந்து போகிறவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு நூறு பேர் இருப்பார்கள். அந்த ஆடம்பர வீட்டுக்கு நிறையப் பணியாளர்கள் வேலைக்கு வந்து சென்றாலும் நிரந்தரமாகப் பணி புரியும் பணியாள் தாயம்மாள் தான். அவளுக்குத் தனியாக அறை கொடுத்திருந்தார்கள்.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்த தாயம்மாளுக்கு அடைக்கலம் அந்த பெரிய வீடு தான் – மாதச் சம்பளம் .மூன்று நேரம் சாப்பாடு ;குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை இல்லை என்று சொன்னதால் தாயம்மாள் தன் குழந்தை குட்டிகளை விட்டு விட்டு பெரிய குடும்பத்தோடு ஐக்கியமானாள். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வீட்டைப் பெருக்கிக் கோலமிட்டு வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் காபி, டீ கொடுத்து அவர்கள் உடுத்திய உடைகளைத் துவைத்துப் போட்டு வெளியில் இருந்து வரும் பணியாளர்களோடு சேர்ந்து அவர்களுக்கு பணிவிடைகள் செய்து, காலை உணவு தயாரித்து கல்லூரி ,பள்ளி, அலுவலகம் செல்வதற்கு அத்தனையும் செய்து முடித்து அவள் உஷ் என்று உட்கார்ந்து காலை உணவு சாப்பிடும்போது மணி மதியத்தைத் தொட்டு நிற்கும். அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்கு தயார் செய்ய வேண்டும். அதிலும் நோயாளிகள் இருக்கும் அந்த வீட்டில் தனியாக உணவு தயார் செய்ய வேண்டும். நன்றாக இருக்கும் மனிதர்களுக்கு வேறு மாதிரியாக உணவு தயார் செய்ய வேண்டும் என்று வந்து போகும் சில பணியாளர்களும் அந்த பெரிய வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். பம்பரமாகச் சுற்றும் தாயம்மாளின் வேலையைப் பார்த்து வந்து போகும் பணிப் பெண்கள் அவளைப் பாவமாகப் பார்த்து கேட்பார்கள்.

” ஏன் தாயம்மா ஒனக்கு எந்த ஊரு? ஏன் இப்படி வந்து ஜெயில் கைதி மாதிரி இங்கயே கிடக்கிற? ஊருக்கு போயிட்டு வர வேண்டியதுதானே?

என்று கேட்டால்

” புருஷன் செத்து அஞ்சு வருஷம் ஆச்சு. குழந்தை குட்டிகளப் படிக்க வைக்கணும். வேற வழியில்ல. புருசன் இல்லாம ஊர்ல இருந்தா எல்லாரும் ஒரு மாதிரியா பேசுறாங்க. ராத்திரி தூங்க முடியல எவனாவது வந்து கதவ தட்டுறான் அதுவும் புருஷன் இல்லாதவ தானே? இவளுக்கு வேற தொடுப்பு இருக்கும் போல அப்படின்னு எல்லாரும் வேற மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்காங்க. நான் வேலை செஞ்சிட்டு, வந்து வீட்ல ஒலை வெச்சா கூட நான் ஏதோ தவறு செய்ததா அவங்க தப்பு கணக்கு போட்டுப் பேசுறாங்க. என்னால தாங்க முடியல. அதான் என் புள்ள குட்டிகள விட்டுட்டு இந்த வீட்டோட வந்து வேலை பாத்துகிட்டு இருக்கேன். என்ன இங்க இருக்கிற புள்ளைங்க பள்ளிக்கூடம் போறதுக்கு சமைச்சு போட்டாத்தான் என் ஊர்ல இருக்குற என் புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு போக முடியும். கடினமான வேலை தான். காசு பணம், சும்மா ஒக்காந்தா வருமா? கஷ்டப்பட்டா தான் வரும்.நான் எனக்காக இங்க வந்து வேலை செய்யல .என் பிள்ளைகளுக்காகத் தான் வேலை

செய்கிறேன் “என்று நெக்குருகிச் சொன்னாள் தாயம்மாள்.

” நாங்களாவது வேலய முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடுறோம் ஆனா நீ தான் தாயம்மா இந்த வீட்டோடயே கிடக்கிற. புள்ளகுட்டிங்க யாரும் பேசுவாங்களா? நீ அவங்க கூட பேச முடியுமா?

” பேசுவாங்க . பள்ளிக்கூடம் போகும்போது பிள்ளைங்க என் கூட பேசனும்னு ஆசைப்படுவாங்க. அப்பத்தான் இங்க இருக்கிற பிள்ளைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு இருப்பேன்; அதனால பேச முடியாது. பள்ளிக்கூடம் முடிச்சு வந்து பிள்ளைங்க என் கூட பேசணும்னு நினைச்சா கூட , இங்க இருக்கிற பிள்ளைங்க பள்ளிக்கூடம் முடிச்சிட்டு வந்துருவாங்க. அவங்களுக்கு டீ ,காபி போட்டு கொடுத்து அவங்களுக்கு பணிவிடை செய்யணும் .அதனால அப்பவும் பேச முடியாது. சரி ராத்திரி பேசலாம்னா, இங்க ராத்திரி உணவு தயார் பண்ணனும் இந்தக் குடும்பத்தை பாக்கணும். அதனால பேசறதுக்கு டைம் இருக்காது. ஏதோ ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை தான் பேச முடியும்.

அதுக்கு மேல பேசுனா வீட்டுக்காரங்க திட்டுவாங்க. வேலை செய்யத் தான வந்த? எப்ப பாத்தாலும் செல்போன்ல பேசிகிட்டு இருக்க? அப்படின்னு யாராவது என்னைய குறை சொல்லி இந்த வீட்டில இருந்து திட்டிவிரட்டிட்டா ,என் பிள்ளைகள படிக்க வைக்க முடியாது .ராத்திரி வேலையெல்லாம் முடிச்சிட்டு நைட்டு தூங்குறதுக்கு நடுராத்திரி பன்னெண்டு மணி ஆயிரும். அந்த நேரம் பிள்ளைகளும் தூங்கிடுவாங்க.என்ன செய்ய எல்லாம் காசு, பணம் தான். என் அப்பா , ஆத்தா சம்பாதிச்சு வச்சிருந்தாங்கன்னா நான் இந்த வேலைக்கெல்லாம் வரணுமா என்ன? என் பிள்ளைகள வளக்க வேற வழி இல்ல. கஷ்டப்பட்டு தான் ஆகணும் ” என்று அவள் சொல்லும் போதே கண்களில் நீர் வழிந்தது

” தாயம்மா இல்லாத ஆளுகளுக்கு எல்லாம் இதுதான் நிலைமை. நீ இங்கேயே இருந்து கஷ்டப்படுற. நாங்க போயிட்டு போயிட்டு வந்து கஷ்டப்படுகிறோம் அவ்வளவுதான். ஆனா, எப்பயாவது ஒருநா ஊருக்கு போயி புள்ள குட்டிகள பாத்துட்டு வா தாயி” என்று சமையலுக்கான வேலை செய்து கொண்டே பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தாயம்மா கண்களில் கண்ணீர் வழிந்தது.

அப்போது இரவு உணவைச் சமைத்துக் கொண்டு இருந்தார்கள். அவளின் செல்போன் செல்லமாகச் சிணுங்கியது

” யாருன்னு பாரு தாயம்மா ” என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டே வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தாள். ஒரு பெண் தக்காளியை நறுக்கிக் கொண்டிருந்தாள். ஒரு பெண் அரிசி அலசிக் கொண்டிருந்தாள். தாயம்மாள் அத்தனையும் சேர்த்து சமைத்துக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் எழுதி வைக்காத தலைமைச் சமையல்காரி.

” யாரா இருக்கும் என் புள்ளைகளா தான் இருக்கும். இந்நேரம் அவங்க கூட பேசணும்னா, சமைக்கிறது கெட்டுப் போகும். பெறகு யாரு இந்த வீட்ல திட்டு வாங்குறது ” என்று சொல்லிக் கொண்டே செல்போனை எடுக்காமல் விட்டு விட்டாள். மறுபடியும் அந்தச் செல்போன் அலறியது.

” ஏன் ஒத்த வார்த்தை பேசினா என்ன டைம் ஆகப் போகுது. எடுத்துபேச வேண்டியதுதானே? என்று இன்னொரு பெண் சொல்ல

” அப்படித்தான் ஒருமுறை நான் பேசினேன். இந்த வீட்டுல இருக்கிற ஒரு பாட்டி திட்டிருச்சு.

“மூணு நேரம் சாப்டுட்டு இருக்க. வீட்டு வாடக இல்ல. நல்ல சம்பளமும் வாங்கிக்கிட்டு இருக்க. அத விட்டுட்டு எப்ப பாத்தாலும் செல்போன்ல பேசிட்டு இருக்கியா? இங்க இருக்கணுமா? இல்ல வீட்ட விட்டுப் போகணுமா? அப்படின்னு அந்தப் பாட்டி என்னைய திட்டிருச்சு. அதில இருந்து போன் வந்தாலே எனக்கு பயமா இருக்கு ” என்று தயங்கிப்படியே சொன்னாள் தாயம்மாள் .

“அங்க என்ன பேச்சு. சமையலாகுதா இல்லையா? என்று அந்தப் பாட்டி குரல் கொடுத்தாள்..

“ஆமாம்மா”

” சீக்கிரம் வேலைய முடிங்க. சும்மா பேசிக்கிட்டு இருக்க கூடாது” என்று அந்தக்கிழவி எகிற

“பாத்திங்களா நான் சொன்னது சரியாப் போச்சா ? இங்க எல்லாமே இப்படித்தான். வெளிய தான் மேல்ப் பூச்சு. உள்ள எல்லாமே வேஷம் ” என்று வருத்தப்பட்டு கொண்டு சமையல் செய்து கொண்டிருந்தார்கள், அந்தப் பணிப்பெண்கள்.

இரவு சமையலை முடித்துவிட்டு தன்னுடைய பணியாளர் அறைக்கு சென்றாள் தாயம்மாள். அவள் சென்றபோது இரவு மணி பனிரெண்டைத் தொட்டு நின்றது. தன்னுடைய பிள்ளைகளிடம் பேசி நீண்ட நாட்களாகி விட்டன என்று நினைத்துக் கொண்டிருந்தவள், இந் நேரம் பேசினா, தூங்கிருப்பாங்க. காலையிலயும் பேச முடியல. ராத்திரிலயும் பேச முடியல. என்ன செய்றது? என்று கண்களில் நீர் ஒழுக பணிப்பெண் அறையில் தரையில் பாயை விரித்துப் படுத்திருந்தாள் தாயம்மாள். அவளை அறியாமலே அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

போன் செய்யலாமா? ? வேண்டாமா? என்று அவள் மனதுக்குள் ஓர் போராட்டமே நடந்தது

” சரி போன் பண்ணித் தான் பாக்கலாம்? என்று தன்னுடைய செல்போனை ஆன் செய்தாள்.

அப்போது ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தது.

யாரு? என்று அந்த வாட்ஸ் அப் செய்தியைத் திறந்த போது

” அம்மா உன் கூட காலையிலயும் பேச முடியல. நைட்டும் பேச முடியல. நீ வேலையா இருப்ப, உனக்கு தொந்தரவு பண்ண கூடாதுன்னு தான் நாங்க உனக்கு போன் பண்றதில்லம்மா. நீ எப்ப ஓய்வா இருக்கியோ , அப்ப ஒரு வீடியோ பதில் அனுப்பு. அது போதும்” என்று தாயம்மாளின் குழந்தைகள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவை அனுப்பி இருந்தார்கள் அதைப் பார்த்தவளுக்கு சுரீர் என்று வலித்தது.

நடுச்சாமம் ஆனாலும் பரவாயில்லை என்று தன் குழந்தைகளுக்கு வீடியோ கால் செய்தாள் தாயம்மாள். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.ஓரளவுக்கு மேல் போன வீடியோ கால் கட் ஆனது. அன்று இரவு முழுவதும் தாயம்மாளின் அழுகைக் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது பணியாள் அறையில்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *