விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவு
விழுப்புரம், ஜூன்.7-
பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் நீதி கிடைக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா கூறியதாவது:-
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் புகார் குழு மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் அனைத்து அரசு அலுவலகங்கள், தலைமை அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் (துணிக்கடை, நகைக்கடை, பீர் கம்பெனி, 10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு உட்புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட உள்ளக குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சமூகநலத்துறையால் பட்டியல் சேகரிக்கபட்டு இதுவரை 110 அரசு துறைகளிலும், 243 தனியார் நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. 73 அரசு அலுவலகங்கள், 211 தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான புகார் அளிக்க மாவட்ட சமூகநலத்துறை, பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மற்றும் http://shebox.nic.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பெண்கள் பணியிடத்தில் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் கடிதமாக அளிக்க வேண்டும். அதற்கு துறையின் அதிகாரி 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மற்றும் நீதி வழங்க வேண்டும்.
தற்போது அரசுத்துறை மட்டுமல்லாமல் அரசியல், தனியார் மற்றும் பிற துறைகளிலும் பெண்களின் மீது பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல்கள் நடந்து வருகின்றன. அதனை நீதித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உன்னிப்புடன் கவனித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஹ்மான், எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.