செய்திகள்

பணவீக்கத்தால் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும்: ரிசர்வ் வங்கி

டெல்லி, மே 19–

பணவீக்கத்தால் மே மாதத்தில் உணவுப் பொருள்களின் விலைவாசி மேலும் உயரும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதையும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் பணவீக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் அது மேலும் உயரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி தனது மாதாந்திர பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மே மாதத்தில் உணவுப் பொருள்கள், பருப்பு வகைகள், தானியங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை மே மாதத்திலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் அதிகரிக்கும்

இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7 சதவிகிதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவிகிதமாக உயர்ந்தது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க சமீபத்தில் ரிசர்வ் வங்கி 0.4 சதவிகிதம் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளும் கடன்கள் மீதான வட்டியை உயர்த்தின. இந்த நிலையில் மே மாதத்திலும் பணவீக்கம் உயரக்கூடும் என்று ரிசர்வ் வங்கி மாதாந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மே 1 ந்தேதி முதல் 12 ந்தேதி வரையிலான காலத்தில் மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் மே மாதத்திலும் உணவுப் பொருள்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் விலை அதிகரிக்கும். குறிப்பாக, கோதுமையின் விலை உயர்வே தானிய வகைகளின் விலை உயர்வுக்குக் காரணம். இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலையும் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. காய்கறிகளில் தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது வரும் மாதங்களிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.