சிறுகதை

பணம் – ராஜா செல்லமுத்து

முரளிக்குப் பணத்தின் மீது ரொம்பவே ஆசை. சராசரி மனிதர்களை விட பணம் தன் வீட்டில் கொட்டிக் கிடக்க வேண்டும் என்று நினைப்பான்.

அதனால்தான் பிறந்த தன் ஒரு மகனையும் பணம், பணம் என்று சொல்லி வளர்க்க ஆரம்பித்தான்.

முதலில் அவன் பிறந்த போது பணம் வரப்போகிறது. பணம் வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் அவன் படிக்க ஆரம்பித்ததும் பணம் போய்க் கொண்டிருக்கிறது பணம் போய்க் கொண்டிருக்கிறது என்று புலம்ப ஆரம்பித்தான்.

ஒன்றாவது படிப்பதில் இருந்து ஐந்தாவது படிப்பது வரைக்கும் அந்த பிஞ்சு மனதில் அவன் பணம் பணம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

‘பிரசன்னா நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும். நல்ல சம்பாதிக்கணும் சரியா?’ என்று முரளி சொன்னபோது,

‘சரிப்பா என்று தலையாட்டினான் பிரசன்னா.

மறுபடியும் ஆரம்பித்தான் முரளி,

‘இந்த பாரு பிரசன்னா, நல்ல படிக்கணும். நல்ல மார்க் எடுக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். கை நிறைய சம்பாதிக்கனும்’ என்ற பாேது

அதற்கும் ‘சரி அப்பா’ என்றான் பிரசன்னா.

ஐந்தாவது படித்து ஆறாவது சென்றான் பிரசன்னா.

ஆறாவது படிப்பதில் இருந்து 12 வது படிப்பது வரைக்கும் அவனைத் தொந்தரவு மேல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான் முரளி.

‘பிரசன்னா நல்லா படிக்கணும். ஸ்கூல்ல முதல் மார்க் எடுக்கணும். நிறைய சம்பாதிக்கணும். சரியா?’ என்றான்.

‘சரிப்பா’ என்றான் பிரசன்னா.

12வது படித்து முடித்தான். நல்ல கல்லூரியில் படிப்பு கிடைத்தது. வரப்பிரசாதம்.‘ நல்ல படிக்கணும் நல்ல இடத்துக்கு பாேகனும். நல்ல வேலை பார்க்கணும். கை நிறைய சம்பாதிக்கணும்’ என்றான் முரளி.

‘சரிப்பா’ என்றான் பிரசன்னா

அப்பா சொன்னது மாதிரியே பிரசன்னா நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றான்.

கை நிறைய சம்பாதித்தான்.

அவனுக்கு வேலை கூட இப்போது உள்நாட்டில் இல்லை. வெளிநாட்டில் என்றானது.

‘பிரசன்னா சொன்னது மாதிரியே வெளிநாட்டு வேலைக்கு போயிட்ட. நல்லா சம்பாதிக்கணும் பிரசன்னா’ என்று அவனை பணத்தை ஒரு பெரிய அளவில் சொல்லி வளர்க்க ஆரம்பித்தான்.

அதனால் அவன் மனம் முழுவதும் பணம் பணம் என்றானது.

ஒரு நாள் பதறிப்போய் அம்மா பிரசன்னாவுக்கு போன் செய்தாள்.

‘தம்பி இப்படி ஆகும்னு நினைக்கலை’ என்றபோது….

‘என்னம்மா?’ என்றான் பிரசன்னா.

‘உங்க அப்பா இறந்துட்டாரு’

என்று சொன்னபோது….

‘அப்படியா?’ என்று எந்த சலனமும் காட்டாத பிரசன்னா, ‘பணம் அனுப்புறேன் தூக்கி புதைத்துவிடு’ என்றான்.

‘என்ன பிரச்சனா பெத்த அப்பாடா. நீ வந்து தான் கொள்ளி வைக்கணும்’ என்றான்.

‘அம்மா சின்ன வயசுல இருந்து அப்பா என்னை பணம் சம்பாதிக்கிற மெஷினா தான் பாத்தாரு வளத்தாரு. எப்ப பாத்தாலும் பணம் சம்பாதிக்கும்; பணம் சம்பாதிக்கனும்னு சாென்னாரு. இப்ப என் மனசு முழுசும் பணம் தான் இருக்கு. அதை தான் அவர் எதிர்பார்த்தாரு. அதனால் நான் பணம் அனுப்புறேன். தூக்கிப் பாேடு’ என்று பிரசன்னா சாென்ன பாேது விழிபிதுங்கி நின்றாள் அவனது அம்மா.

Leave a Reply

Your email address will not be published.