சிறுகதை

பணமா….? பாசமா….? | கரூர் அ. செல்வராஜ்

பணி ஓய்வு காலத்தில் ராமச்சந்திரனும் அவரது மனைவி ராஜேஸ்வரி அம்மாளும் தங்களது கடைசி மகன் ரமேஷ்குமார் வீட்டில் தங்கியிருந்தனர். இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருந்தனர். மாதாமாதம் பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது.

ராமச்சந்திரன் -– ராஜேஸ்வரி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் 3 பேர். அதில் 2 பேர் பெண்கள். 3 வதாக பிறந்த ஆண் குழந்தை தான் ரமேஷ்குமார். பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலையில் உள்ள மாப்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.

கடைக்குட்டி மகன் ரமேஷ்குமாருக்கு அவன் விரும்பியபடியே கம்ப்யூட்டர் சென்டர் கடையையும் வைத்துக் கொடுத்து குடும்பத்திற்கேற்ற ஒரு நல்ல பொண்ணையும் தேடிக் கல்யாணம் செய்து வைத்தனர்.

பணி ஓய்வுக்காலம் பரபரப்பு இல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்ததால் ராமச்சந்திரனும் அவரது மனைவி ராஜேஸ்வரி அம்மாளும் கவலை இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

அமைதியான நதியில் அழகிய ஓடம் சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஆற்று வெள்ளம் பெருகி வந்து ஓடத்தை மிதக்க விடாமல் தடுத்து மூழ்கடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியதைப்போல ராமச்சந்திரன் –- ராஜேஸ்வரி அம்மாளின் குடும்பத்தில் பூர்வீகச் சொத்தான வீட்டுப் பிரச்சனை வெடித்தது.

பெற்றோரைப் பார்க்க தம்பி வீட்டுக்கு வந்திருந்த அக்கா கவிதா தனது குடும்ப விசேஷத்தை சொல்லிவிட்டு பூர்வீக சொத்தான வீடு விஷயத்தை தனது அப்பாவிடம் பேச ஆரம்பித்தாள்.

“அப்பா”

” சொல்லும்மா கவிதா “

” அப்பா! நம்ம சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு தம்பி வீட்டிலேயே வந்து அம்மாவும் நீங்களும் தங்கீட்டீங்க. உங்களுக்கு வயசு 72 ஆச்சு. அம்மாவுக்கு 70 வயசு ஆச்சு. நம்ம பூர்வீக சொத்தான வீட்டைப்பத்தி யோசிச்சீங்களா? உயில் ஏதாவது எழுதினீங்களா ” என்று கேட்டாள் கவிதா.

கவிதாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அவளது அம்மா ராஜேஸ்வரி அம்மாள் மகள் கவிதாவுக்கு பதில் சொல்லும் விதமாக பேசத் தொடங்கினாள்.

” கவிதா!”

“சொல்லுங்கம்மா “

” சொத்துப் பிரச்சனையை பேசச் சொல்லி உன்னை உன் வீட்டுக்காரர் தூண்டி விட்டாரா?”

” இல்லேம்மா “

” அப்புறம், உன் தங்கச்சி தமிழ்ச்செல்வி தூண்டிவிட்டாளா?”

” இல்லம்மா “

” அவளும் தூண்டி விடலேன்னா… இதை யாருதான் தூண்டி விடறது” என்று கேட்டாள் ராஜேஸ்வரி அம்மாள். அம்மாவின் கோபத்தைத் தணிக்கும் விதமாக கவிதா மீண்டும் பேசத் தொடங்கினாள். “அம்மா! உங்களுக்கும் அப்பாவுக்கு வயசு ஆயிடுச்சு. நீங்க சுகமா இருக்கிற காலத்திலேயே நம்ம பூர்வீக சொத்தான வீட்டை பத்தி ஒரு முடிவு எடுத்தா நல்லது. ரொம்ப காலத்துக்கு பிறகு தம்பிக்கு பிரச்சனை வரும். அதைத் தவிர்க்கணுமின்னா அப்பா ஒரு உயில் எழுதி வைக்கிறது நல்லதும்மா. அதைத்தான் நான் சொல்ல வந்தேன் ” என்றாள் கவிதா.

மகள் கவிதா பேசிய பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் பேசத் தொடங்கினார்.

” கவிதா! நான் பேசுற விஷயங்களை கொஞ்சம் பொறுமையா கேளும்மா. பூர்வீக குடும்பச் சொத்திலே மகனுக்கு இருக்கிற சம உரிமை மகளுக்கும் உண்டுன்னு நம்ம நாட்டு சட்டம் சொல்லுது. அதை நான் ஏத்துக்கிறேன். சமபங்கு தரவே மாட்டேன்னு சொல்லலை. ஆனா உன் தம்பி ரமேஷின் குடும்ப நிலையை நீயும் உன் தங்கச்சியும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. நம்ம வீட்டை விற்றால் சுமார் 60 லட்சம் கிடைக்கும். அதிலே நீங்க மூணு பேரும் ஒவ்வொருத்தருக்கும் சமபங்கு அப்படீன்னு பாகம் பிரிச்சா 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். வீட்டை மூணாவது மனுஷனுக்கு விற்காமே உங்க தம்பியே வச்சிக்கிட்டு உங்களுக்கு பணம் தர்றதா இருந்தா என்ன விலையை நிர்ணயம் செய்யப் போறீங்க? இதையெல்லாம் நீங்க மூணு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. இதுக்காக உங்களுக்கு 15 நாள் அவகாசம் தர்றேன் ” என்றார் ராமச்சந்திரன்.

15 நாட்கள் கழிந்தன. ராமச்சந்திரன் –- ராஜேஸ்வரி தம்பதியரின் பெண் குழந்தைகள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அப்பாவின் சொந்த சம்பாத்திய வீட்டை 3 குழந்தைகளுக்கும் சரிசம பங்கு உயில் எழுதுவது என்றும் பிறகு வீட்டை தம்பி ரமேஷுக்கு விற்பது என்றும் வீட்டின் விலையாக 45 லட்சம் ரூபாய் மதிப்பிடுவது என்றும் 2 அக்காக்களுக்கும் சமமான பங்கு தொகையை இரண்டு தவணைகளாக ரமேஷ் தருவது என்றும் சுமூகமான முடிவு அறிவிக்கப்பட்டது.

சொத்துக்காக சொந்த தம்பி உறவு முறிய கூடாது என்ற அக்கா இருவரின் முடிவால் கிடைத்த மகிழ்ச்சியால் மன நிம்மதி அடைந்தனர் ராமச்சந்திரன் – ராஜேஸ்வரி அம்மாள் தம்பதியினர்.

பணமா…? பாசமா…? என்பதற்கு விடை கிடைத்தது அவர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *