செய்திகள்

பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்

திருப்பூர், பிப். 28

திருப்பூர் அருகே இன்று அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் பணத்தை எடுக்க முடியாததால் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை உள்ளது. இங்கு ஏடிஎம் இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவுக்கு ஸ்ப்ரே அடித்துள்ளனர். தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றது. அது முடியாமல் போனதால் அந்த இயந்திரத்தை உடைத்து எடுத்து வெளியே கொண்டு வந்து அங்கு தயாராக நிறுத்தியிருந்த வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்றனர்.

ஏடிஎம் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தொடங்கினர். மேலும் வங்கி கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் எந்திரத்தை வாசல் வரை கொண்டு வந்து பின்பு வாகனத்தில் ஏற்றி சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் இதில் ஏடிஎம் இயந்திரத்தின் கதவுகள் மற்றும் வாசல் ஆகியவை சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை வேறு ஒரு வண்டியில் எடுத்துச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *