4 கடைகளில் கைவரிசை
திருவனந்தபுரம், செப். 11–
கேரள மாநிலம் கொல்லம் சாமகடை சாலையில் ஏராளமான கடைகள் வரிசையாக உள்ள நிலையில், மர்ம நபர் ஒருவர் இரவில் 4 கடைகளில் புகுந்து கைவரிசை காட்டினாலும் சில்லறை காசுகளை மட்டுமே திருடிச்சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் சாமகடை சாலையில், கடைகள் பூட்டியிருந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடைகளின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் கடையை திறக்க கடைக்காரர்கள் வந்த பிறகுதான் திருட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
வியப்பளிக்கும் திருடன்
கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கடைக்குள் நுழைந்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கடையில் வைத்திருந்த பணம் பத்திரமாக அப்படியே இருந்தது. அதே சமயம் கடையில் இருந்த சில்லறை காசுகள் அனைத்தும் திருடு போயிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு நடந்த 4 கடைகளிலும் சோதனை நடத்தினர்.
அப்போது கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர், கடையின் உள்ளே மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்து மேஜையில் வைத்துவிட்டு, சில்லறையை மட்டும் திருடிச் சென்றார். காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட்டுப் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாக திருட்டு நடந்த இடத்தில் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை விட்டுச் செல்வதில்லை. எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துச் செல்வார்கள். ஆனால் கொல்லம் கடைகளில் கைவரிசை காட்டியவர் பணப்பைகளை வித்தியாசமாக வைத்து சிறு காசுகளை மட்டும் திருடிச் சென்றது ஆச்சரியமாக உள்ளது.