சினிமா

பட விழாக்களில் 10 விருதுகளை குவித்திருக்கும் ‘குழலி’: கவுரவக் கொலையில் மீண்டும் ஒரு காதல் திரையில்!

பத்திரிக்கை தோட்டத்திலிருந்து நாயகி ஆரா- – ‘குழலி’ படம் மூலம் திரையில் மலர்ந்து இருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரிய செய்தி. இவர் தனியார் ஊடக அலுவலர் – மக்கள் தொடர்பாளர் துரைப்பாண்டியன் மகள். முட்டை விக்னேஷ் இளம் நாயகன். குறை சொல்ல முடியாத இளம் ஜோடி.

கைக்கடக்கமான பட்ஜெட்டில் பள்ளிக் காதலைச் சொல்லி இருக்கிறார்கள். குழலி- நாயகியின் பெயரில் டைட்டில்.

“காதல் ஒருபோதும் தோற்பதில்லை; காதலர்கள் தோற்கிறார்கள்” என்பதுதான் மையக்கரு.

கீழ்ஜாதிப் பையனை மேல் ஜாதிப் பெண் காதலிக்கிறாள். வழக்கமான எதிர்ப்பு கௌரவக் கொலை. காதலி மறிக்கிறாள் ஆறு ஆண்டுகள் கழித்து டாக்டர் ஆக அதே கிராமத்திற்கு திரும்பும் காதலனை அதே ஊர் மேல்ஜாதி அடித்துக் கொல்கிறது, இது கதை!

கவுரவக் கொலை செய்யப்பட்ட நாயகியின் தாய், கிராமத்துப் பள்ளிக்கூடத்தை கடந்து செல்லும்போது, பள்ளி வளாகத்தில் “ஜாதிகள் இல்லையடி பாப்பா…” என்ற மகாகவி பாரதியின் பாடல் ஒலிக்கிறது. அதை சிறுவர்-சிறுமிகள் திரும்பச் சொல்கிறார்கள். அதைக் கேட்டு ரத்தம் கொதிக்கும் தாய், காரித் துப்புவதாக காட்சியோடு முடிகிறது படம். உணர்வாக்கம்: ஏசரா. கலையரசன் என்று கொட்டை எழுத்துக்களில் பெயர் விழுகிறது திரையில்.

பாடலாசிரியர்களின் வரிகளைக் காயப்படுத்தாத உதயகுமாரின் இசை, கிராமத்தின் அழகை பளிச்சென்று அழகாக படம் பிடித்திருக்கும் ஷமீரின் காமிரா, பாபு பிரபாகரன் அரங்க நிர்மாணம் ‘குழலி’க்கு பலம்.

பல்வேறு பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் 10 விருதுகளை குவித்திருக்கிறாள் குழலி என்பது படத் தயாரிப்பாளர்கள் கே-பி வேலு, ஜெயராமன், எம் எஸ் ராமச்சந்திரன் மூவருக்கும் மகிழ்ச்சி தரும்!

Leave a Reply

Your email address will not be published.