முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக.23–-
பட்டுக்கோட்டையில் விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ் குடும்பத்துக்கு ரூ,25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்ட ஆயுதப்படை பெண் போலீசாக பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் சுபபிரியா கடந்த 21-–ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 8.30 மணியளவில் பட்டுக்கோட்டை உட்கோட்டம் பேராவூரணி இரட்டைவயல் கிராமம் கண்ணமுடையார் அய்யனார் கோவில் திருவிழாவின் பாதுகாப்பு பணி முடிந்து தனது தங்குமிடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரது பின்புறம் பேராவூரணியிலிருந்து இரட்டைவயல் நோக்கி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
சுபபிரியாவின் உயிரிழப்பு தமிழ்நாடு போலீஸ் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சுபபிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ,25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.