சினிமா

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேட்டி

Spread the love

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், போனாலும், அசைக்க முடியா மூவர் கூட்டணி சாலமன் பாப்பையா, பாரதிபாஸ்கர், ராஜா.

தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில், உலக தமிழர்களுக்கு, நகைச்சுவையுடன், சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசி, இலக்கிய விருந்து படைப்பவர்கள்.

திரைநட்சத்திரங்களுக்கு மத்தியில் பேச்சாளர்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது இவர்களுக்கு மட்டுமே.

பட்டிமன்ற மேடைகளில் எளிய உரை நடையால் மக்கள் மனதை கட்டிப்போடும் ராஜாவை, ‘மக்கள்குரல்’ நாளிதழின் சிறப்பு செய்திக்காக அணுகியபோது, அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பட்டிமன்றம் என்பது…?

பட்டிமன்றத்துக்கு 2 ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது. மணிமேகலை, கம்பராமாயணம் என பழைய இலக்கியங்களில் பட்டிமன்றம் பற்றிய குறிப்பு உள்ளது. இது போன்ற வடிவத்தில் இல்லை என்றாலும், ‘பட்டிமண்டபம்’ என்ற சொல் மக்கள் மத்தியில் இருந்து உள்ளது.

‘பட்டிமண்டபம்’ என்பது இயல் தமிழ். அதில் பேச்சுத்தமிழ் இருக்கனும், கொஞ்சம் இலக்கிய நடையோ அல்லது மக்கள் நடையோ வச்சுக்கலாம். பாடலோ, இசையோ சேர்த்தால், அது பட்டிமன்றம் ஆகாது.

வேறு மொழிகளில்?

வேறு எந்த மொழிகளிலும் ‘பட்டிமன்றம்’ என்ற அமைப்பு கிடையாது. அது தமிழுக்கே உரியது.

தமிழர்கள் வாழ்கின்ற உலகின் அத்தனை நாடுகளிலும் பட்டிமன்றத்துக்கு ஈர்ப்பு உள்ளது.

உலக மொழிகளில் எதிலும், இந்திய மொழிகளில் எதிலும் பட்டிமன்றம் நடப்பதாக எனக்கு தெரியவில்லை.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஒரு பயணத்தில் சந்தித்தேன். அப்போது அவர், இந்தியாவில் ஐந்து, ஆறு மொழிகளில் ‘ரியாலிட்டி ஷோ’ செய்கிறேன். வேறு எந்த மொழியிலும் பட்டிமன்றம் இல்லை என்றார்.

வெளிநாடுகளில் எதிர்வாதம், விவாதம், டிபேட், பேனல் டிஸ்கஸ் இருக்குமே தவிர, ஒரு நடுவர், ஒருதலைப்பு, அதை ஒட்டி வெட்டி பேசுவது, அதற்கென ஒரு மரபு என இப்படி ஒரு அமைப்பு இல்லை.

இதன் தாக்கம் பற்றி?

பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் பேசப்படுவதில்லை.

சாதாரணமாகவே ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். காலப் போக்கில் பள்ளி கல்லூரிகளில் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வந்தாலும் வரலாம். அப்படி வரும்போது தமிழ் மொழி, கல்வியில் இருக்காது.

பிள்ளைகள் தமிழ் பேசுவதை தவறாக நினைக்கிறோம். மொழி சிதைகிறது.

மொழியை நினைவுப்படுத்துவதற்கு, ஆலயங்களில் பக்தி பாசுரம், சொற்பொழிவுகள் இருக்கிறது. அது குறிப்பிட்ட ஒரு சில மக்களுக்கு மட்டுமே புரியும்.

உலகம் முழுவதும் அடுத்த தலைமுறைக்கு பட்டிமன்றம் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு குழந்தைகள் அதிகம் வருகிறார்கள். நாங்கள் பேசுவதை ரசித்து கேட்கிறார்கள்.

நல்ல தமிழை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கிறோம். தமிழ் பேசுவது ‘மகிழ்ச்சி’ என்பதை பட்டிமன்றம் உணர்த்துகிறது.

ரசனையில் ஏற்படும் மாற்றங்கள்?

அன்று நியை நேரம் இருந்தது. பொறுமை இருந்தது. 1980 களில் தூர்தர்சனை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம். ஊரில் திருவிழா என்பது எப்பவோ நடக்கும். பொழுதுபோக்கு கேளிக்கை இருக்காது. கிராமத்தில் சிறுநகரங்களில் சினிமாவுக்கு போவார்கள்.

இன்றைய தலைமுறை மொபைல் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். அவனுக்கு எதுவுமே பிடிக்க மாட்டிங்கிறது. அவனை நிறுத்தி வைத்து 4 மணி நேரம் இலக்கியம் கேள் என்றால் எப்படி கேட்பான்.

ஆனாலும், ஒருப்பக்கம் கம்பன் கழகங்கள், திருவள்ளுவர் மன்றங்கள், சிலப்பதிகார விழாக்கள் உலகம் முழுவதும் நடக்கிறது. பெரியபுராணத்துக்காக சேக்கிழார் விழா நடத்துகிறார்கள்.

தரம் தாழும் நிலை?

படித்தவர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், தமிழறிஞர்கள் மேடையில் வந்து இலக்கியம், குடும்பம், சமூகம் சார்ந்த விஷயங்களை விவாதம் செய்வதை மக்கள் விரும்பினார்கள்.

இது நகைச்சுவையாகவும் இருக்கும்; சீரியசாகவும், புரியாத செய்தியை சொல்வதாகவும் இருக்கும். தரக்குறைவாகவோ, ஆபாசமாகவோ இருக்காது. இன்று, பேச்சாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தரகுறைவாக பட்டிமன்றத்தை நடத்துகிறார்கள். அதில் நடுவராக இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சியோ, இலக்கிய பின்புலமோ இல்லை. நான்கைந்து பாடல்களை மனப்பாடம் செய்து வைத்தும், யூ டியூபில் மற்றவர்கள் பேசியதை காப்பியடித்தும் பேசுகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் இரட்டை அர்த்தம் அதிகம். அதையும் பெண்கள் பேசுவது வருத்தம். இது மாற வேண்டும்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுக்காமல் இருக்கனும். அப்போது தான் பட்டிமன்ற அமைப்பு அதற்குரிய மரியாதையுடன் இருக்கும்.

சவாலான பேச்சாளர்கள்?

நமக்கு எதிராக பேசும் ஒரு ஒரு பேச்சாளரும் சவாலானவர்களே.

மேடை ஏறி பேசுவதே முதல் சவால். ஒரு தலைப்புக்குள் நின்று பேசுவது அடுத்த சவால். நல்ல கேட்கிற மனநிலையில் சூழலில் ஆடியன்ஸ் இருப்பது ஒரு சவால்.

இரு அணிகளிலும் நல்ல பேச்சாளர்கள் அமைய வேண்டும். 10 நிமிடத்துக்கு மேல் தரமாட்டார்கள். பட்டிமன்ற சுவையே நேர வரையறைதான். கொடுக்கும் நேரத்துக்குள் நகைச்சுவை, செய்திகள், எதிர் அணிகளுக்கு மறுப்புகள் என இவ்வளவும் சொல்ல வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மேடையும் சவால்தான்.

பாரதிபாஸ்கர் பற்றி?

எங்களது எல்லா பட்டிமன்றங்களிலும் பெரும்பாலும் எல்லா மேடைகளிலும் எனக்கு எதிர் அணியில் பாரதி பாஸ்கர்தான் இருப்பார். எனக்கு போட்டி பேச்சாளராக பார்க்கப்படுகிறார். பேச்சாளர் வரிசையில், மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு செய்தியை அணுகுவது, சரியான தயாரிப்புடன் வருவது, உடனே யோசிப்பது, இலக்கிய பின்புலம் அதிகம் இருக்கிற பேச்சாளர் அவர். அவர் இருக்கும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என நினைப்போம். அவரை எதிர்த்து பேசுவது சவால்தான்.

வெற்றி, தோல்வி குறித்து?

இது தேர்தல் அல்ல. வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றுதான்.

பேச்சாளர்களும், அணிகளும் ஜெயிப்பதை விட, பட்டிமன்றம் ஜெயிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பட்டிமன்றம் என்பது ஒரு கலைவடிவம். தமிழின் பெருமை; அடையாளம்.

அதன் மூலம், இரு அணிகளும் தமிழை தமிழின் மூலம் செய்திகளை மக்களுக்கு சொல்ல பார்க்கிறார்கள்.

சாலமன் பாப்பையா போன்ற மிகப்பெரிய மனிதர்கள், மக்களுக்கு நிறைய சொல்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தின் வெற்றி முக்கியமே தவிர, நான் ஜெயிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.

 

மாற்றம் என்றால்? 

தற்போது, மருத்துவம், சுற்றுச்சூழல் பற்றி நாங்கள் ஓரளவு பேசி வருகிறோம்.

கேளிக்கை பகுதியாக மட்டுமல்லாமல், சமூக மாற்றங்களை கொண்டு வருவதற்கு, மத நல்லிணக்கம், ஜாதிகளில் இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க, பொதுமக்கள் மத்தியில் நேர்மை வருவதற்கு பட்டிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.

 

கோயில்கள் குறைந்தது

ஒரு காலத்தில் மதுரையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு கோயில் இருக்கும். அந்த கோயில்களில் விழாக்கள் நடக்கும். அவசியம் அதில் பட்டிமன்றங்கள் இருக்கும். பல்வேறு அறிஞர்கள் பேசுவார்கள்.

தற்போது, 80 சதமான கோயில்கள் நகர விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்டு விட்டது. இதனால் மதுரை போன்ற பகுதிகளில் பட்டிமன்றங்கள் குறைந்து போனது.

சமாளித்த அனுபவம்

“இளைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்தது அந்த காலமா? இந்த காலமா” என்ற தலைப்பு.

எனக்கு முன் சேஷாத்ரி என்ற தம்பி பேசினார். அவருக்கு அது தான் முதல் மேடை. அவர் ஐடியில் வேலை பார்ப்பவர். இந்த காலத்தில் நான் சந்தோசமாக இல்லை என, அவர் தனக்கு இருந்த பிரச்சனைகளை முன் வைத்து பிரமாதமாக பேசினார்.

வழக்கமா நாங்க எந்த அளவுக்கு கைத்தட்டல் வாங்குவோமா அதை விட அதிகமா அன்று கைத்தட்டல் வாங்கினார்.

அடுத்து நான் பேச வேண்டும். அப்போது நான்,

இன்று தம்பி பேசினார்.

இவ்வளவு காலமாக மேடையில் இருக்கிறேன்.

இந்த மாதிரி கைத்தட்டல் யாருக்கும் கிடைத்ததில்லை.

இவ்வளவு சின்னவயசில் பேசி உலகம் முழுவதும் பாப்புலர் ஆகிறார் என்றால், இந்த காலம் தானே அவர்களுக்கு மகிழ்ச்சியான காலம் என பேசினேன்.

நான் பேசும் போது, இவர் நம்மை பாராட்டிதான் பேசுகிறார் என அந்த தம்பி நினைத்திருந்தார். ஆனால், நான் அவர் பாயின்ட்டை எடுத்தே உல்டாவாக பேசிவிட்டேன். பெரிய சவால்களை ஜெயிக்க முடியாமல் போனால் கூட சமாளிக்கலாம்.

 

‘சிவாஜி’ படம் ஷூட்டிங். வீட்டில் இருப்பது போல் காட்சி. என்னை பனியனுடன் நிற்க வைத்திருந்தார்கள். ரஜினி வந்தவுடன் எல்லோரும் அவருக்கு வணக்கம் வைத்தார்கள். முதன் முறையாக பார்க்கிறோம்; பனியனுடன் அவர் முன்னால் எப்படி போவது என்று தயங்கினேன்.

அவர் என்னை பார்த்து, பட்டிமன்ற ராஜா தானே? நல்லா இருக்கீங்களா? என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. வெறும் பனியனில் நின்றும், அடையாளம் கண்டுபிடித்து விட்டாரே என ஆச்சர்யமாக இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *