செய்திகள் நாடும் நடப்பும்

பட்டினி குறியீடு அதிர்ச்சி!


ஆர். முத்துக்குமார்


இந்தியாவின் உற்பத்தித் துறை வலுவாக இருக்கும் நிலையிலும் புதிய வணிகம் மற்றும் அதிகரித்து வரும் உற்பத்தி அளவுகளின் மூலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் தரமான உற்பத்தியில் கவனமாக இருந்தாக வேண்டும்!

குறிப்பாக உணவு உற்பத்தி சமாச்சாரங்களில் முன்பு நாம் கடைபிடித்த 5 ஆண்டு திட்டம் போல் விசேச செயல்திட்ட சிந்தனை அவசியம் தேவைப்படுகிறது.

காரணம் சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்படுகிறது. இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான இடத்தைப் பிடித்துள்ளது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் கடந்த ஆண்டை விட (101) ஆறு இடங்கள் பின்தங்கி தற்போது 107 வது இடத்தைப் பிடித்திருக்கிறது வல்லரசு இந்தியா.

சீனா, குவைத், துருக்கி ஆகிய நாடுகள் பட்டினியே இல்லாத நாடுகளாக முன்னிலையில் உள்ளன.

உலக பட்டினி குறியீடு என்பது குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு (undernourishment), குழந்தையின் வயதுக்கேற்ற உயரம் குன்றிய நிலை (child stunting), குழந்தையின் உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லாத நிலை (child wasting), குழந்தை இறப்பு (child mortality) ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

இந்தியாவை விட மோசமான இடத்தில் உள்ள நாடாக, தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் (109 வது இடம்) மட்டுமே உள்ளது.

குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பதில் (stunting) மற்ற நாடுகளை விட இந்தியாதான் மிகவும் மோசமான நிலையில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். உலக அளவில் 44 நாடுகள் தீவிரமான அல்லது ஆபத்தான நிலையில் உள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2-வது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

இந்தியா வளமான இயற்கை, கனிம வளங்களைக் கொண்டபோதிலும் ஏன் இந்த நிலை?

இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டுமெனில் ரேசன் கடைகளில் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரேசன் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இந்தியா மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் அறுபது பில்லியனர்களைக் கொண்ட உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி யடைந்துள்ளது என்று நாம் பெருமைப்படும் இக்காலகட்டத்தில் உடனடியாக இச்சிக்கலில் இருந்து தப்பித்து வெளிவர போர்கால அடிப்படையில் விரிவான செயல் திட்டம் தேவைப்படுகிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *