செய்திகள்

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை: ராகுல் உறுதி

Makkal Kural Official

சிம்லா, மே.27-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை உறுதி செய்யப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வினோத் சுல்தான் புரியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார்.

அங்கு அவர் உனா மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் இமாசலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவும் இருந்தார்.

அதன் பின்னர் இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் உள்ள நஹன் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழையால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க ரூ.9,000 கோடி கொடுக்க முடியவில்லை.

இந்த மாநிலத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை திருட அவர் (மோடி) முயற்சி செய்தார்.

ஆப்பிளின் விலையை கட்டுப்படுத்த அனைத்து சேமிப்பு வசதிகளையும் ஒருவரிடம் ஒப்படைத்தார் மோடி. அவர் பதவியேற்கும் போதெல்லாம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு விலைகள் உயரும்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதுடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஏழைக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் வரும் வரை ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்காக அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘பேலி நவுக்ரி பக்கி அதிகாரம்’ திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை உறுதி செய்யப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

#rahulgandhi #job #unemployment #poverty #congress #narendramodi #BJP

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *