ஆர். முத்துக்குமார்
அடுத்த மாதம் இந்நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023–24க்கான பட்ஜெட்டை சமர்ப்பித்திருப்பார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 1 அன்று சமர்ப்பிக்கப்படலாம். இது கொரோனா பெரும் தொற்று ஓரளவு உறுதியாகவே நம்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்.
அது மட்டுமா? அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் இம்முறையே பாரதீய ஜனதாவின் நடப்பு ஆட்சிக் காலத்தின் இறுதிப் பட்ஜெட் ஆகும்.
அடுத்த ஆண்டு முழு பட்ஜெட்டை சமர்ப்பிக்க முடியாது. இடைநிலை பட்ஜெட்டை சமர்ப்பித்து தேர்தல் பணிகளுக்கு போதிய பட்ஜெட் சமாச்சாரங்களை மட்டுமே ஒதுக்குவார்கள்.
ஆக இம்முறை சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் பாரதீய ஜனதாவிற்கு மிக முக்கியமான பட்ஜெட் ஆகும்.
சாமானியர்கள் விரும்பும் சலுகைகள், வருமானவரி உச்ச வரம்பு மாற்றம், ஜிஎஸ்டி குறைப்பு என எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். காரணம் அடுத்த ஆண்டு வாக்கு சேகரிக்க மக்களை அணுகும்போது மகிழ்ச்சியான வரவேற்பு இருக்குமே! ஆனால் பாரதீய ஜனதாவின் திட்ட அறிவிப்புகளை உற்று கவனித்து வரும் நிபுணர்கள் அப்படி ஏதும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது அபத்தம் என்று தான் கூறுவார்கள்.
பாரதீய ஜனதா மக்கள் நலத்திட்டங்களை நடைமுறை படுத்தும் பாணி வித்தியாசமானது. நேரடியாக ஏழைகளுக்கு மட்டும் சென்றடையும். இதர தரப்புக்கு தேவையின் அடிப்படையில் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
உண்மையில் நல்ல நிதி நிலை பெற்றவர்களுக்கு ஏன் சலுகைகள்? என்ற கேள்வியுடனே தான் சலுகை அறிவிப்புகள் நடைமுறைபடுத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு கடன் வரி ரத்து, கூட்டுறவு வங்கிகளில் கடன் இருந்தால் அதை முழுவதும் ரத்து செய்தோம் அல்லவா? உண்மையில் கடன் வாங்கியவர்கள் அடமானமாக நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துக்களை வைத்துதான் வாங்கி இருப்பார்கள். அல்லது அவரது வரி செலுத்தல் அடிப்படையில் அவருக்கு கடன் தரப்பட்டும் இருக்கலாம்.
அப்படிப்பட்டவர் விவசாய கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பி தரும் வசதி படைத்திருந்தும் பயன் அடைந்தால் என்ன பயன்? ஏழை விவசாயி அதே பயனாளியிடம் கடன் வாங்கி இருந்தால் காலம் முழுவதும் கடனுக்கு வட்டியையும் அவருக்கு தந்து கொண்டு தான் இருக்க வேண்டும் அல்லவா?
ஆக மொத்தம் ஏழைகளுக்கு எந்த பயனுமின்றி பல லட்ம் கோடி ரூபாய் திட்டம் வீணாகி விடுகிறது அல்லவா?
அடுத்த மாதம் நிதி அமைச்சர் முன் இருக்கும் பல்வேறு செலவீனங்களுடன் உக்ரைன் விவகாரம் முடிவுக்கு வரும் அறிகுறி ஏதுமில்லாததால் பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா, சீனா உட்பட எல்லா முன்னணி பொருளாதார நாடுகளும் சந்தித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சீனாவில் மீண்டு எழ ஆரம்பித்து வரும் கொரோனா தொற்று அரக்கனும் திகில் தர நிதி அமைச்சர் கையை பிசைந்து கொண்டு அரசியல் நெருக்கடிகளையும் மறுபுறம் பொருளாதார நிதர்சனத்தையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற ஆர்வத்தையும் எழுப்புகிறது.