நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது அரசின் இரண்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1 ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையானது, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ற கட்டுமான மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பதை தீவிரமாக ஆலோசிப்பது மிக அவசியமாகியுள்ளது. எதிர்க்கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் முன்வைக்கும் சில முக்கியமான கேள்விகள், இந்த பட்ஜெட்டின் வளர்ச்சி பாதையைப் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன.
கேள்விக் குறி
பட்ஜெட்டில் அனைவரும் எதிர்பார்த்த வருமான வரி வரம்பு உயர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆண்டிற்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது படுசாமர்த்தியமான ஒரு முடிவு எனப் பாராட்டப்பட்டாலும், சாமானிய பொதுமக்களுக்கு பயன் தருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதிக பட்சம் 2 கோடி மக்கள் மட்டுமே இந்த வரம்பு உயர்வால் பயன்பெறலாம். ஆனால் நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி என்பது மறுக்க முடியாத உண்மை. இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி ஒரு நீண்டகாலச் சுமையாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், “நடுத்தர சம்பளதாரர்களை வரி வளையத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், அரசியல் சூழ்நிலையின் காரணமாக அது நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஆனால், இம்முறை பாஜக அரசு தற்போதைய பட்ஜெட்டில் வருமான வரி தளர்வு வழங்கியதன் மூலம், சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் வரி கட்டும் கட்டாயத்திலிருந்து விடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதல் வருமானம் இல்லை என்றாலும் தற்போதைய பட்ஜெட்டில், நடுத்தர சம்பளதாரர்கள் அனைவரும் வரி வளையத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளனர்.
காலம்தான் பதில் தரும்
இதன் விளைவாக, அரசின் வருவாய் எவ்வளவு பாதிக்கப்படும்? அரசு இதற்குப் பதிலாக, மறைமுக வரிகளை (Indirect Taxes) அதிகரிக்கப் போகிறதா? இதற்கு காலம்தான் உரிய பதிலை தரும், அதுவரை காத்து இருப்போம்.
அனைவருக்கும் பாதகமாக இருக்கும் மறைமுக வரிகள், குறிப்பாக பெட்ரோல், டீசல் வரிகள் குறைக்கப்பட்டிருந்தால், பெரும்பாலான மக்களுக்கு நேரடி நன்மை கிடைத்திருக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மாதம் ரூ. 25,000 வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்திற்காக எந்த நேரடி நிவாரண திட்டமும் இல்லை என்பது கவலையை தரத்தான் செய்கிறது.
தங்கம் மற்றும் அமெரிக்க டாலரின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கு ஆதரவாக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய கட்டம் இது. இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 10,000 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்கள் உருவாக்கப்படும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் என அறிவிக்கப்படும் திட்டங்கள் பெரும்பாலும் அமுலுக்கு வராது என்பதே வரலாறு அல்லவா? மக்களின் நினைவில் நீடிக்காது என்பதே நாம் கற்ற பாடம். எனவே, நடப்பாண்டிற்காக அறிவிக்கப்பட்ட 10,000 இடங்கள் உடனடியாக செயல்படுத்தப்படுமா என்பது மிகவும் முக்கியமானது.
பொதுச் செலவினம் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உணவுத் துறை மானியம், விவசாயம், எரிசக்தி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நலன், நகர்ப்புற வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளில் கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து பெரிதும் குறைவாகவே செலவழிக்கப்பட்டுள்ளது.
ஊக்கம் தருமா?
இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முறையான தீர்வா? அல்லது அரசின் நிதிநிலை குறுக்குவழிக் கொள்கைகளை வெளிப்படுத்தும் பட்ஜெட்டா? என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
மொத்ததில் 2025-26 நிதிநிலை அறிக்கை, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிபடுத்துமா, என்ற விவாதம் எழத்தான் செய்யும். கூடவே சமூகத்திற்குத் தேவையான சில முக்கிய அம்சங்களை புறக்கணித்துவிட்டதா? என்பது அடுத்த சில மாதங்களில் மட்டுமே தெளிவாகும்.
வருமான வரி சலுகைகள், மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு, அரசு செலவினக் கொள்கை, மறைமுக வரிகள் குறைப்பு இல்லாதது, குறிப்பாக நடுத்தர வர்க்கம் திக்கு தெரியாமல் தவிக்க வைத்து இருப்பது , இம்முறை பட்ஜெட் ஓரளவிற்கு சமநிலை பேண முயன்றாலும், உண்மையான வளர்ச்சிக்கு ஊக்கம் தருமா? என்ற கேள்வியே மேலோங்கி இருக்கிறது.