சிறுகதை

படைப்பாளன்– ராஜா செல்லமுத்து

எந்த ஒரு விஷயத்திற்கும் எந்த ஒரு படைப்புக்கும் நேர்மறை, எதிர்மறை சிந்தனைகள்; நேர்மறை, எதிர்மறை வாதங்கள்; நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள்; நேர்மறைப் பேச்சு, எதிர்மறைப் பேச்சு; நல்லது, கெட்டது என்பவை உண்டு.

வித்தகன் எழுதிய ஒரு கவிதைக்கு நேர்மறையான பதிவுகள் நிறைய வந்து விழுந்தன . எதிர்மறையான பதிவுகளும் நிறைய வந்து விழுந்தன. இது எதற்கும் வித்தகன் மயங்குகிறவர் அல்ல. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். வார்த்தைகள் எல்லை மீறிப் போகாமல் பார்த்துக் கொண்டிருந்த வாசகர் வட்டம் வர வர வித்தகன் மீது விமர்சனங்களைத் தொடுத்தது.

‘என்ன பாலு …. கவிதைங்கிற பெயரில் காமத்தை வச்சிருக்கான் இந்த வித்தகன். ஒவ்வொரு வார்த்தையிலேயும் அசிங்கம் கசிஞ்சு வருது. ரெட்டை அர்த்த வசனம் தூக்கலா இருக்கு. கவிதைன்ற பெயரில் ஒரு காமப் பாடம் நடத்திக்கிட்டு இருக்காரு. இவர சும்மா விடக் கூடாது. சமூக வலைதளங்களில் இதுல படிச்சவங்க, படிக்காதவங்க, ஆண், பெண், குழந்தைகள் என நிறைய பேர் இருப்பார்கள்.

இவ்வளவு மோசமான கவிதைகளை எழுதி எப்படி பிரச்சாரம் செய்யலாம் ? இதை விடக் கூடாது’ என்று வாசகர் வட்டம் முதல் வாசிக்கும் அத்தனை பேர்களும் போர்க்கொடி தூக்கினார்கள். அவர் எழுதியது சரியா? தவறா? என ஒரு படைப்பாளனின் எழுத்து பார்வையாளனைப் பல வகையில் சிந்திக்க வைக்கும். அவர் எழுதியது ஒன்றும் நேர்மறையான கருத்துதான். ஆனால் அதை எதிர்மறையாப்க பிடித்துக் கொண்டார்கள்.

வேண்டுமென்றே ஆயுதத்தை எடுப்பதற்காக ஆயிரம் கணைகளை அவரின் புகழ் மீது வீசினார்கள். மேடை போட்டு திட்டினார்கள் . அசிங்கங்களை ஏக்கர் கணக்கில் விட்டார்கள். அமைதியாக இருந்தார் வித்தகன்.

அவரின் நண்பர்கள் சக படைப்பாளிகள் சகட்டுமேனிக்கு திட்டினார்கள்.

‘என்ன வித்தகன். நீங்க ஒரு படைப்பாளி. உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கீதம் இல்லையா? இப்படி பேசிட்டு இருக்காங்க. நீங்க எப்படி மௌனமா இருக்கீங்க? இது தவறு. இது உங்க கவிதையின் கீறல் தன்மானமுள்ள தமிழுக்கு நேர்ந்து விடக் கூடாது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நீங்க ஒரு கருத்து எழுதி இருக்கிறீர்கள். அவங்க ஒரு கருத்தை புரிஞ்சுக்கறாங்க. உங்க புகழுக்கும் பேருக்கும் கலங்கம் விளைவிக்கிறார்கள். இதைப் பார்த்துட்டு நாங்க சும்மா இருக்க முடியாது. நீங்க கேட்கிறீங்களா? இல்ல நாங்க கேட்கவா?’ என்று வித்தகனுக்கு ஆதரவாகப் பேசியது ஒரு கூட்டம்.

‘இல்லைங்க வேண்டாம். கத்திட்டு தான் இருப்பாங்க. திரும்பி நாம கத்தக் கூடாது. நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும்’ என்று மழுப்பி விட்டார் வித்தகன்.

‘இல்ல தப்புங்க. ஒரு படைப்பாளன் இவ்வளவு மோசமா இருக்கக் கூடாது. கேவலமாக பேசுறாங்க. அத பாத்துக்கிட்டு சும்மா இருக்க எங்களுக்கே ஒரு மாதிரியா இருக்கு’ என்று படைப்பாளர்கள் முறுக்கிக் கொண்டு நின்றார்கள்.

வித்தகன் எதற்கும் அசைவதாகத் தெரிவதில்லை. எதிர் அறிக்கை கூட விடாமல் இருந்தார் . அப்போது வித்தகனைப் பார்த்து ஒரு கவிஞர் சொன்னார்.

‘ஐயா கவிஞரே ஏன் இவ்வளவு பயந்திட்டு இருக்கீங்க. படைப்பாளைன் எப்படி இருக்கணும் தெரியுமா? நுனி மூக்கு மேல காேபம் இருந்திருக்கணும். எவன் தப்பா பேசினாலும் அவனைத் தட்டி கேட்கணும்..ஒரு படைப்பை தப்பா சொல்றதுக்கு அவன் தகுதியுள்ள ஆளா இருக்கணும். அதப் பொருளுணர்ந்து பேசணும். அதைத் தைரியமாகத் தட்டிக் கேக்குற ஆளா இருக்கணும். நீங்க படைப்பாளி இல்லை’ என்று கோபமாகப் பேசினார்.

அதற்கு வித்தகன் நிமிர்ந்து பார்த்தார். ‘என்ன பாக்கறீங்க? சிறுகதை சிங்கம் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. அவரோட சிறுகதையை ஒருத்தன் தவறா விமர்சனம் பண்ணினான். அவன் வெளி மாநிலத்தில் இருந்தவன் பாேல. அவன் இருக்கிற இடம் தேடிப் போயி, நீ எப்படிடா என்னுடைய கதையை விமர்சனம் பண்ணலாம்? அதுக்கு நீ தகுதியான ஆளா? என்று சட்டையைப் பிடித்து அடித்துக் கேள்வி கேட்டு வந்தவர் ஜெயகாந்தன்.

அப்படிப்பட்ட தமிழ் சிற்பிகள் இருந்த இலக்கியத்துல நீங்களும் இருக்கிறீர்கள்? உங்கள பேசுறத கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது. ஜெயகாந்தன் மாதிரி நாங்களும் ரெயில் ஏறவா?’ என்று படைப்பாளர்கள் சாெல்ல, அதுவரை யார் திட்டினாலும் மௌனமாக இருந்த வித்தகனின் மீசை இப்போது கொஞ்சம் முறுக்கேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *