இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை, ஏப்.29–-
‘படிப்புடன் விளையாட்டையும் அன்றாடம் இணைத்துக்கொள்ளுங்கள்’ என இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது:-–
‘பிடே’ கேன்டிடேட்ஸ் தொடரில் வெற்றி வாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேசுக்கு, ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையும், கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.
இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலையும், மனதையும் விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அது உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.