கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
சென்னை, செப். 16–
மது ஒழிப்பில் பாமக பி.எச்டி. முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார் என அன்புமணி ராமதாஸ், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. மதுவிலக்கு என்பது அனைவருக்குமான பிரச்சினை. மது ஒழிப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்துள்ளோம்.
விமர்சனங்கள்
வருகிறது
இந்த மாநாட்டில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் அவரவர்கள் விருப்பம். நிறைய கசப்பான அனுபவங்களால் சேர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு பா.ம.க.வினர் தான் எங்களை தள்ளிவிட்டனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பா.ம.க.வை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. மதுவிலக்கு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. எங்கள் நோக்கத்தில் எவ்வித களங்கமும் இல்லை. களங்கம் கற்பிக்க பலரும் நினைக்கிறார்கள். அதை நாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை.
மதுக்கடைகளுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவார்கள். மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மதுக்கடைகள் இருக்கட்டும் என எந்த அரசியல் கட்சியும் சொல்ல வாய்ப்பு இல்லை. மதுவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. மதுவுக்கு எதிராக அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது ஏன்? சேர்ந்து குரல் கொடுக்க கூடாது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மதுக்கடைகளை மூட முடியும். மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதிகாரத்தில் பங்கு என்ற பதிவை திமுக மிரட்டியதால் நீக்கியதாக கூறினார்கள். தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாகவே நான் நம்புகிறேன். மதுவிலக்கை பேசுவதால் எந்த விளைவுகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எளிய மக்களுக்கும்
அதிகாரம்
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி., ‘‘1975 இல் இருந்து மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் அதுபோல நடப்பதில் தவறில்லை. இது யாருக்கும் எதிராகவும் மிரட்டுவதற்காகவும் எழுப்பக்கூடிய கருத்து அல்ல. ஜனநாயக ரீதியான கோரிக்கை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது ஜனநாயகம் அல்ல. அதிகாரம் என்பது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது. வி.சி.க திட்டமிட்டு ஒரு காயையும் நகர்த்தவில்லை. கடைசி மக்களுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான் எனது நிலைப்பாடு. 2026 தேர்தல் வரும்போது இந்த கோரிக்கை தி.மு.க கூட்டணியில் முன்வைக்கப்படுவது குறித்து பதில் சொல்கிறேன்’’ என்று கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு, அதிகாரித்தில் பங்கு என்று கூட்டணிக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மதுவிலக்கு மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு நேரில் அழைக்க வந்துள்ளேன். மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது,
மாநாட்டின் நோக்கம். மதுஒழிப்பு மாநாட்டின் முதன்மையான நோக்கம். அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். திமுகவுக்கும் அந்த வேண்டுகோளை வைக்கிறோம். அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை. இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பாமகவோடு சேர்ந்து செயல்பட முடியாதபடி அவர்கள் தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.