வாழ்வியல்

படிக்கும்போதே புதுமையான கருவிகளை வடிவமைக்கும் கீரமங்கலம் மாணவர் சிவ சந்தோஷ்

ஊதியத்துடன் பணிபுரிய சென்னை ஐஐடி அழைப்பு


அறிவியல் அறிவோம்


படிக்கும்போதே புதுமையான கருவிகளை வடிவமைக்கும் தமிழ் மாணவர் சிவ சந்தோஷை ஊதியத்துடன் பணிபுரிய சென்னை ஐஐடி என்ஜினீயரிங் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தனது வீட்டில் புதிய கண்டுபிடிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர் மாணவர் சிவ சந்தோஷ்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் சிவ சந்தோஷ். இவர், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-ல் 10-ம் வகுப்பு முடித்தார்.

பின்னர் புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் படித்துக்கொண்டு இருக்கும்போதே பல்வேறு ஆராய்ச்சிகளில் சிவ சந்தோஷ் ஈடுபட்டு வருகிறார். இவர், அல்ட்ராவைலட் லைட் மூலம் கிருமிகளை அழித்தல், தானியங்கி முறையில் ஒரே கருவியில் உடல் வெப்பத்தை அளத்தல், சானிடைசர் ஊற்றுதலுக்கான கருவிச் செயல்பாடு, நிலத்தில் சொட்டு நீர் விநியோகத்தை முறைப்படுத்துதல், வளிமண்டலத்தில் நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை அளக்கும் கருவி, சூரிய ஒளியில் இருந்து நேரடியாகத் தண்ணீரைச் சூடுபடுத்துதல் போன்றவற்றுக்கான பல்வேறு கருவிகளைச் சொந்தமாக வடிவமைத்துள்ளார்.

மேலும் விண்வெளியில் பயிர் சாகுபடி செய்வது குறித்த தொடர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர், தனது படைப்புகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்தத் தகவலின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் இவரது முயற்சியைப் பாராட்டியுள்ளன.

மேலும் சில நிறுவனங்களுக்குத் தேவையான கருவிகளையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அதன்படி, சென்னை ஐஐடி நிறுவனம் இவரைப் பாராட்டியதோடு, ஊதியத்துடன் பணிபுரியவும் வாய்ப்பு கொடுத்துள்ளது.

இதுகுறித்து சிவ சந்தோஷ் கூறும்போது, ”பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே இயந்திரவியல் குறித்து ஆர்வம் அதிகமாக இருந்தது. விருப்பத்தின் பேரிலேயே இந்தப் படிப்பைப் படித்து வருகிறேன்.

புதிய கருவிகளை வடிவமைக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் சில மட்டுமே வெற்றியைத் தந்துள்ளன. எனது புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்து, பல்வேறு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. அதில், சூரிய ஒளியில் இருந்து நேரடியாகத் தண்ணீரைச் சூடுபடுத்தும் கருவியைப் பாராட்டிய சென்னை ஐஐடி அங்கு ஊதியத்துடன் ஆராய்ச்சிப் பணி செய்ய வாய்ப்பு அளித்துள்ளது.

இதை எனது தொடர் முயற்சிக்குக் கிடைத்த சிறு வெற்றியாகவே பார்க்கிறேன். இதற்கிடையில் சக மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

படித்து முடித்துவிட்டு வேலைக்காக இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டு இருக்கும்போதே பணி வாய்ப்பை உறுதிப்படுத்திய இளைஞரின் திறமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *