செய்திகள்

பஞ்சாப் மாநில ஆளுனராகும் பன்வாரிலால் புரோகித்: வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்

சென்னை, செப். 14–

பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க இன்று புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர்.

தமிழகத்தின் 14வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார்.

நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோகித்தை, கிண்டி ராஜ் பவனில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோர் உடன் சென்றனர்.

எடப்பாடி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பன்வாரிலால் புரோகித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க செல்லும் பன்வாரிலால் புரோகித்தை இன்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பொன்னாடை அணிவித்து வழியனுப்பி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பன்வாரிலால் புரோகித்திற்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஆர்.என்.ரவி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். தமிழகத்தின் 15வது கவர்னராக அவர் சனிக்கிழமையன்று (18–ந்தேதி) பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *