நாடும் நடப்பும்

பஞ்சாப் அரசியல் குழப்பம் காங் கிரஸ் தலைமைக்கு புது சவால்கள்


ஆர். முத்துக்குமார்


அடுத்த ஆண்டு மிக முக்கிய சட்டமன்ற தேர்தல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்ப அரசியல் அரங்கேறுவதால் கட்சியின் தலைவர்களுக்கு பல்வேறு தலைவலிகள் ஆரம்பமாகிவிட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அம்மாநிலத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியலில் தனக்கென ஒரு தனி ஆதரவு படையுடன் அரசியல் செய்து வரும் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்.

அன்று முதலே தேன்கூட்டில் கைவிட்ட கதையாய் காங்கிரஸ் தலைமை அதாவது சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு பல்வேறு நெருக்கடிகள் துவங்கி விட்டது.

சித்து பாரதீய ஜனதாவில் இருந்து விலகி தனிக் கட்சியை துவக்கினார். சில மாதங்களில் காங்கிரசில் சேர்ந்து கொண்டார்.

பாரதீய ஜனதாவின் முதல்வர் பதவிக்கு தான் நியமிக்கப்படலாம் என ஏங்கி இருந்த சித்துவிற்கு தரப்படாததால் சில ஆண்டுகளில் வெளியேறி சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். வெகு விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தலைமைக்கு கட்டுப்பட்டு அமரீந்தர் சிங்கை முதல்வராக பதவியில் அமர வெகுவாகவே பாடுபட்டவர் ஆவார். தான் துணை முதலமைச்சர் பதவியில் அமரலாம் என கனவு கண்ட அவரது நிலை பரிதாபமாக அமைச்சர் பதவியுடன் நின்று விட்டது.

அமரீந்தருடன் இணைந்து செயல்பட முடியாமல் திணறிய சித்து தெளிவாக அரசியல் சாதுரியத்துடன் காய்களை நகர்த்தி ஒரு வழியாக அம்மாநிலத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தார். இது அம்ரீந்தருக்கு பிடிக்காமல் போக சித்து தனது கட்சி எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு தனது முதலமைச்சர் பொறுப்புக்கே சவால் விட ஆரம்பித்து வருவதாக கூறி வந்தார். சில வாரங்களுக்கு முன்பு திடீரென கட்சி தலைமை தன்னை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கும் முன் தானே ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தார்!

இது சித்துவின் சித்து வேலை என்று அமரீந்தர் குற்றம் சாட்டினார். இருந்தாலும் தான் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றும் தொண்டன் என்று கூறி சித்துவின் தலைமையை ஏற்று நடப்பதாக கூறினார்.

இதற்கிடையே கட்சி தலைமை சரண்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் தான் அம்மாநிலத்தின் முதல் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக உயர்ந்தவர் ஆவார்.

இதைத் தேர்தல் நேரத்தில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கனவு கண்ட காங்கிரஸ் தலைமைக்கு பேரிடியாக சித்து திடீரென கட்சியின் தலைமை பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இப்படிக் கட்சியை நடு ரோட்டில் தவிக்க விட்டு விட்டுச் செல்வது சித்துவின் வாடிக்கையாகி விட்டதை அம்மாநில மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

சித்துவின் அடுத்த திட்டம் சொந்த கட்சியா? பாரதீய ஜனதாவின் கூட்டணிக்கே திரும்புவதா? என்பதை யோசித்துக் கொண்டிருக்கையில் அவரது வளர்ச்சிக்கு இடைஞ்சலாக அமரீந்தர் சிங் பாரதீய ஜனதாவின் பலசாலி தலைவரான அமித்ஷாவை சந்தித்து அரசியல் பேசியுள்ளார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது அவர் கூறியுள்ளதாவது:–

‘‘நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன். காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ, அவருக்கு முதல்வர் பதவியை வழங்கட்டும். இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எனது ஆதரவாளர் களுடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வேன்’’ என்றார்.

‘‘ராகுல், பிரியங்கா ஆகியோர் அனுபவமற்றவர்கள். அவர்களை தவ றாக வழிநடத்துகின்றனர்’’ என்று கூறி காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை எழுப்பினார்.

மறைமுகமாக சித்து ராகுல், பிரியங்காவின் நிழல் என்று கூறுகிறார் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருத ஆரம்பித்தனர். இதனிடையே கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் பேசவில்லை என்று அமரீந்தர் தரப்பு தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

எது எப்படியோ, அமித் ஷாவை, அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசியது காங்கிரஸ் மேலிடத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அமரீந்தர் சிங், பாஜகவில் விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் பலமான தலை வரை பாஜக தேடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், அமரீந்தர் சிங் தங்கள் பக்கம் வந்தால் பஞ்சாபில் கட்சி வலுவடையும் என பாஜக மேலிடம் கருதுகிறது.

இதனிடையே அதிருப்தியில் உள்ள அமரீந்தர் சிங்கை சந்தித்து சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

காங்கிரஸில் ஜி-23 என்று அழைக்கப்படும் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் அமரீந்தர் சிங்கை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருக்கும் அமரீந்தர் சிங்கை இழக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

மொத்தத்தில் சித்துவின் அரசியல் வியூகம் காங்கிரஸ் கூடாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதுடன் மேலும் பிளவுகள் ஏற்படுத்தியும் வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் தற்காலிக தலைவராக சோனியாவும் அவரது நிழலாக செயல்படும் ராகுலுக்கும் இந்த நிகழ்வுகள் பேரிடியாக மாறி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் இந்த குழப்பமான அரசியல் குளத்தில் மீன் பிடிக்க வலை வீசத் துவங்கி விட்டது!

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நாள் நெருங்கும் முன்பே தனது பலத்தை இழந்து விடாமல் ஸ்திரமாக நிற்க வழி கண்டாக வேண்டிய கட்டாயத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *