செய்திகள்

‘பஞ்சமுக பாலச்சந்தர்: சிரிப்பலையில் மிதந்தது பாரதீய வித்யா பவன்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 10-

“என்றும் நினைவில் வாழும்” இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் 95 ஆவது நாள் பிறந்த நாளை ஒட்டி, பாரதிய வித்யா பவனில் 5 நாட்கள் தொடர் நாடக விழா நடந்தது. கே பாலச்சந்தர் மீது அபரிமிதமான மரியாதையும், மதிப்பும், பாசமும் வைத்திருக்கும் பாரதிய வித்யா பவனின் தலைவர் என் ரவி, இயக்குனர் ‘கலைமாமணி’ கே.என். ராமசாமி, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள். பாலச்சந்தருக்கு மரியாதை- – புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவரால் ஆராதித்து, அரவணைத்து, வளர்த்து, வாழ்த்தப்பட்டிருக்கும் மூத்தக் கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திரா, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், டிவி வரதராஜன் ஆகிய ஐவரின் நாடகங்களை மயிலைப் பகுதியிலும், சுற்று வட்டாரத்திலும் உள்ள பொதுமக்கள் இலவசமாக கண்டு மகிழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் “பஞ்சமுக பாலச்சந்தர்” என்னும் தலைப்பில் விழா எடுத்திருந்தார்கள்.

‘‘பொதுமக்களுக்குத் தான் நாடகம் இலவசம். ஆனால் நாடகக் குழுவினருக்கோ – அவர்கள் இன்றைய தேதியில் வாங்கும் பணத்தைக் கொடுத்துத்தான் அவர்களை மேடை ஏற்றி இருக்கிறோம். பாலச்சந்தருக்கு நாங்கள் செய்யும் கௌரவம் இது. காரணம் தாய் என்னும் நாடக மேடையில் இருந்து படஉலகத்திற்குச் சென்று புரட்சியை செய்து சரித்திர சாதனையாளராக உயர்ந்து இருப்பவர்’’ என்று பவனின் நிர்வாகி வெங்கடாசலம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இயக்குனர் சிகரத்தின் நகைச்சுவை உணர்வு

பாலச்சந்தரின் வாழ்க்கை சரிதத்தை “சிகரம்” என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கும் இசைக்கவி ரமணன் இயக்குனர் சிகரத்தின் சிறப்புக்களை- அவரின் குணாதிசியத்தைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

“தமிழ் சினிமா- பாலச்சந்தரை கடந்து வந்திருக்கலாமே ஒழிய, அவரை ஒரு போதும் தாண்டி விட முடியாது. அதுதான் கேபி” என்று 12 வார்த்தைகளில் புகழாரம் சூட்டினார்.

இதே போல பாலச்சந்தரால் வளர்ந்து ஒவ்வொரு மேடையிலும் அவரது பெயரை உச்சரித்து, விசுவாசியாக இருக்கும் டிவி வரதராஜன், பாலச்சந்தருக்கு இயல்பாய் இருக்கும் நகைச்சுவை உணர்வை நகைச்சுவையாய் குறிப்பிட்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாலச்சந்தரோடு அவரின் நிழலாகவே நடந்து இருக்கும் அவரின் அந்தரங்க உதவியாளர் கே.பி. மோகனை மேடையில் அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் வெங்கடாசலம்.

பதிலுக்கு கேபி மோகன், பாரதிய வித்யா பவன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து, பாலச்சந்தருக்குப் பிடித்தமான திருக்குறள் புத்தகத்தையும் – பாலச்சந்தரின் உருவப்படத்தையும் பரிசாக வழங்கினார். முடிவில் கிரேசி குழுவினரின் மாது பாலாஜி நடிக்கும் “மீசை ஆனாலும் மனைவி” நாடகம் (901 வது முறை மேடை) நடந்தது. பெண் வேடம் ஏற்ற அழகன் கார்த்திக் (கவிதாலயா கிருஷ்ணனின் சகோதரரின் மகன்), அப்பா ரமேஷ் உள்ளிட்ட கலைஞர்கள் பேசிய ஒவ்வொரு வசனத்திற்கும், அவர்களின் நடிப்புக்கும் நிமிடத்திற்கு நிமிடம் கைத்தட்டல் எழுந்தது. அரங்கமே வாய் விட்டு சிரித்தது.90 நிமிடம் கரைந்ததே தெரியவில்லை. அரங்கமே சிரிப்பு அலையில் மிதந்தது.

கமலஹாசனின் அன்பு வேண்டுகோள்

“கிரேசி நாடகக் குழுவில் புதிது புதிதாக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் பயிற்சி அளித்து மேடை ஏற்ற வேண்டும். கிரேசியின் நகைச்சுவை பாரம்பரியம் தொடர வேண்டும்’’ என்ற கமலஹாசனின் கண்டிப்பான அன்பு வேண்டுகோளை ஏற்று, குழுவில் புதியவர்களை சேர்த்து இருக்கிறோம். இயக்குனர் காந்தன் தரும் சீரிய பயிற்சியில் அவர்களும் நடித்து வருகிறார்கள். அனுபவம் புதுமை. இது கண்டு மேலே இருந்து (சொர்க்கம்) கே பி சாரும், கிரேசி மோகனும் எங்களை வாழ்த்திக் கொண்டு இருப்பார்கள்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மாது பாலாஜி.

அரங்கில் தரைத் தளத்தில் அத்தனை இருக்கைகளும் நிரம்பியது. இதே போல மாடியிலும் இருக்கைகள் நிரம்பின. மேடை ஏறும் படிக்கட்டுகளிலும் ரசிகர்கள் அமர்ந்தது, நாடகத்தைக் கண்டு களித்தது- பாரதீய வித்யா பவன் ராமசாமி + கிரேசி கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி!

(அரங்கில் திரண்டிருந்தவர்களில் 100க்கு 80% 60,70,80 வயதைக் கடந்தவர்கள் என்பதும் கணவன் – மனைவி என தம்பதி சமேதரராக வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது)

விழா மேடையில் கே.என்.ராமசாமி, நீதிபதி ஜெகதீசன், வெங்கடாசலம், நல்லி குப்புசாமி செட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர்.


– வீ.ராம்ஜீ


#K. Balachandar #Y.G.Mahendra #S.V. Shekar #Isaikkavi #Ramanan #Nallikuppusamy #Kaththadi Ramamurthy #Crazy Mohan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *