செய்திகள்

பச்சிளம் குழந்தை போல பக்குவமின்றி பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

சென்னை, ஏப். 4–

”உதயநிதி ஸ்டாலின் பக்குவமின்றி பேசி வருகிறார்; அவர் ஒரு பச்சிளம் குழந்தை போல செயல்படுகிறார் என அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் டி.ஜெயகுமார், ராயபுரம், கல்மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் ரிக் ஷாவில் நின்றபடி, நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உதயநிதி ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதி போல பேசவில்லை. பக்குவம் இன்றி பேசி, பச்சிளம் குழந்தை போல செயல்படுகிறார். தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு உளறல் மன்னன். அவரால் கட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். இது தேர்தலில் பிரதிபலிக்கும். வருமான வரித்துறைக்கு வரும் தகவலின்படியே சோதனை செய்கின்றனர். மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். தி.மு.க. ஊழலில் ஊறிய கட்சி.

அண்ணா தி.மு.க. அமைச்சர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல், எல்லாரிடமும் சோதனை நடத்துகின்றனர். வருமான வரித்துறை சோதனை செய்வதை, எங்கள் மீது திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ராயபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் 100 கோடி இறக்கப் போவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்து, ஜனநாயகத்தை பணத்தால் வெல்ல வேண்டும் என்ற அவர்களின் நினைப்பு மக்களிடம் எடுபடாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *