செய்திகள் வாழ்வியல்

பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் என்றால் என்ன?


அறிவியல் அறிவோம்


பசுமை ஹைட்ரஜன் என்பது ஒரு வகையான தூய எரியாற்றலாகும். இது சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கவல்ல எரியாற்றலைப் பயன்படுத்தி, தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர் வழியாக மின்சாரம் கடத்தப்படும்போது ஹைட்ரஜன் உற்பத்தியாகிறது. இந்த ஹைட்ரஜன் பல விஷயங்களுக்கு எரியாற்றலாக செயல்படும். ஹைட்ரஜனை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மின்சாரம் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களிலிருந்து வருகிறது. அதனால் மாசு ஏற்படாது. அதனால்தான் இது பசுமை ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. எண்ணெய் சுத்தீகரிப்பு, உரம், எஃகு மற்றும் சிமென்ட் போன்ற கனரக தொழில்துறைகளை, கார்பன் இல்லாத ஒன்றாக ஆக்கிட இது உதவும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.ஹைட்ரஜன் ஒரு நிறமற்ற வாயு. ஹைட்ரஜனின் நிறம், பச்சை, நீலம், சாம்பல் முதல் நீலமும் பச்சையும் கலந்த நிறம் என, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து அமையும். பசுமை ஹைட்ரஜன் மட்டுமே தூய்மையான எரியாற்றல் ஆகும். இது புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து 60 லட்சம் டன் க்ரே ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட்டது .

2050-க்குள் இந்தியாவில் ஹைட்ரஜனின் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும். ஆனால் பசுமை ஹைட்ரஜன், புதைபடிவ எரிபொருட்களை விட 50 சதவிகிதம் மலிவானதாக மாறும் போது மட்டுமே அதனால் போட்டியிட முடியும்.

இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட எரியாற்றலில் 40 சதவிகிதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகும். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. ஆனால் பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு வசதி இல்லாமல் புதுப்பிக்கவல்ல ஆற்றல், வழக்கமான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. அதாவது புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கான சேமிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை பெரிய அளவில் பயன்படுத்த முடியும்.

பசுமை ஹைட்ரஜனை மிகப் பெரிய அளவில் சேமிக்க முடியும். நீண்ட தூரம் செல்லும் டிரக்குகள், பேட்டரியால் இயங்கும் கார்கள், பெரிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ரயில்கள் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாக இருக்கும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *