செய்திகள் நாடும் நடப்பும்

பசுமை மின் உற்பத்தியில் சாதிக்கும் தமிழ்நாடு!


ஆர். முத்துக்குமார்


சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதை கொண்டாடிய நாம், இடைப்பட்ட காலக்கட்டத்தில் செய்துள்ள சாதனைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். விண்வெளி விஞ்ஞானம் முதல் வீட்டு உபயோக மின் சாதனங்கள் வரை, பல்வேறு துறைகளில் உலகமே வியக்கும் வகையில் வளர்ந்துள்ளோம்.

ஆனால் மோட்டார் வாகனம் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் வெளியேற்றப்படும் கரும் புகைகள் பற்றிய விழிப்புணர்வு அண்மை காலமாகத்தான் அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் ஆரோக்கியமான சூழலில் வாழ நாம் சில முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை நினைத்துப் பார்க்கும்போது எதிர்காலம் ஒளிமயமானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

குறிப்பாக தமிழ்நாட்டின் தினசரி மொத்த மின் நுகர்வில் காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையம் உள்ளிட்ட ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ உற்பத்தித்துறை, 80 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையம் உள்ளிட்ட ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் காற்று சீசன் தொடங்கியபோது காற்றாலைகள் மூலம் தினசரி 90 மில்லியன் யூனிட் முதல் 120 மில்லியன் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் ‘ புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ‘ உற்பத்தித் துறையின் கீழ் உள்ள காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையங்கள் மூலம் அதிக மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் தினசரி மொத்த மின் நுகர்வில், ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ உற்பத்தித் துறை 80% பங்களிப்பதாக, இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சூழல்

தமிழ்நாட்டின் தினசரி மொத்த மின் நுகர்வு 260 முதல் 290 மில்லியன் யூனிட் வரை உள்ளது. காற்றாலை, சூரிய ஒளி, நீர்மின் நிலையம் உள்ளிட்ட ‘ புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ உற்பத்தித் துறை பங்களிப்பு மட்டுமின்றி, நாட்டிற்கு கலங்கரை விளக்கம் போல் ஒளியை காட்டி வழிகாட்டுகிறது கூடங்குளம் அணுமின் நிலையம். அது ரஷ்யா நமக்குத் தந்திருக்கும் விலைமதிப்பில்லா பரிசாகும்.

நம் மாநிலத்தின் மின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதுடன் அதிகப்படி மின் தயாரிப்பைப் பெற வைத்து, நாட்டின் மின் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அதுமட்டுமின்றி அணுமின் நிலையம் பசுமை மய மின் தயாரிப்பு முறை என்பதை உலகம் உணர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையும் நல்ல ஆரோக்கியமான சூழலில் வளர உறுதியாகவே இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published.