ஆர். முத்துக்குமார்
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை நமது பொருளாதாரம் 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
சில முடிவுகள் உடனடி நன்மைகளாக இருக்கும். மேலும் ஒருசில அறிவிப்பு மனகசப்பை தரலாம்!
ஆனால் நாட்டின் வருங்கால வளர்ச்சிகளை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளை நாம் மனதார வரவேற்றாக வேண்டும்.
இன்று நாம் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் ஒருசில நாட்களில் உருவானதே கிடையாது! நவீன திரைப்பட வசதிகளான ஓடிடி தளங்களின் பின்னணியில் 19–ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாமஸ் ஆல்வா எடிசனின் சினிமா தொழில்நுட்பத்தை உருவாக்கியதுடன் கணினி வடிவங்கள் பெற்றது வரை எல்லாவற்றின் புதிய பரிணாமத்தை தான் இன்று நாம் அனுபவிக்கிறோம்.
அதுபோன்று நமது வாகனங்களும் இதை இயக்கும் சக்திகளும் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது.
நிலக்கரி, டீசல் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்கள் சமீபமாக மின்சாரத்தை கொண்டு இயங்குகிறது. அந்த மின்சார தயாரிப்பும் நமது காற்றுமண்டலத்திற்கு பாதகமானது தான்!
அடுத்த சில தலைமுறைகள் ‘நெட் கார்பன் ஜீரோ’ அதாவது மாசு தூசு வெளியிடா வாகனங்கள் இருந்தால் தான் சுவாசித்து வாழ வழி இருக்கும் என்பதை உணர்ந்து இன்று எடுக்கப்பட வேண்டிய பசுமைமய விவகாரங்களை எடுத்து வருகிறோம்.
அதற்கு இம்முறை பட்ஜெட்டில் ரெயில்வே துறை மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உந்துதல் தந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய அம்சம் ஆகும்.
இம்முறை பட்ஜெட்டில் இவ்வாண்டு இறுதிக்குள் 35 ஹைட்ரஜன் ரெயில் சேவைகள் துவங்கி விடும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி தந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சென்றவார இறுதியில் ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு பேட்டியில் நாட்டின் முதல் ஹைட்ரஜனில் ஓடும் ரெயில் சுற்றுலா தலமான கால்கா, சிம்லா மலையில் ஓட துவங்கி விடுமாம்.
ஆக முதல் கட்டமாக ஓட இருக்கும் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் இயற்கை வளப்பகுதிகளில் இயங்கிட திட்டம் தயாராகி விட்டது. இதன் வெற்றியின் பின்னணியில் கரும்புகை அறவே இல்லா இந்தியாவை 2080–ல் உருவாக்க நாம் முனைப்புடன் களம் இறங்கி விட்டோம் என்பதை உறுதி செய்கிறது.
கடந்த ஆண்டு தான் அல்ஸ்டாம் என்ற நிறுவனம் ஜெர்மனியில் 1500 கிலோ மீட்டருக்கு கிட்டத்தட்ட 140 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தி வெற்றி கண்டது. தற்போது அந்நாட்டில் 15 அதுபோன்ற ரெயில்கள் தயாராகி விட்டது.
சீனாவிலும் 2021–ம் ஆண்டிலேயே சோதனை செய்து வெற்றியை அறிவித்தது.
உலகின் மிகப்பெரிய ரெயில் சேவை திட்டம் கொண்ட நம் நாட்டில் தான் கரும்புகை கக்கும் ரெயில்களின் ஓட்டம் மிக அதிகமாகும்.
மெல்ல நாம் முற்றிலும் மின்சார ரெயில்களுக்கு மாறிவரும் நிலையில் ஹைட்ரஜன் தயாரிப்பிலும் முனைப்புடன் இருக்கிறோம்.
ஹைட்ரஜன் உபயோகம் அதிகரிக்க இருப்பதை உணர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஹைட்ரஜன் தயாரிப்பில் நுழைந்து விட்டோம்.
இந்த ஹைட்ரஜன் வாயு கொண்டு இயங்கும் சாதனங்கள் வெற்றி பெறுமா? என்ற கேள்விக்குப் பதில் பெட்ரோல், டீசலில் உள்ள கார்பன் அமிலம் இல்லாத ஹைட்ரஜன் வாயு எளிதில் நல்ல முறையில் எரியும் திறன் கொண்டது. அப்படி எரியும் சக்தியால் விபத்துக்கள் உருவாகி விடுமே? என்பது தான் இதுவரை இருந்த கவலை!
ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் கொண்டு எரிசக்தி உருவாக்கி, கழிவு பொருளாக தண்ணீரையும் பெற வைக்கிறது.
மிக பாதுகாப்பான இயந்திரங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் மிக மும்முரமாக உலகெங்கும் நடைபெற ஆரம்பித்து விட்டது.
ஆக அடுத்த சில ஆண்டுகளில் உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் ஹைட்ரஜன் வாகனங்கள் நமக்கு பல சொகுசான பயண அனுபவங்களைத் தர இருக்கிறது.
கரும்புகை வெளியேற்றம் அறவே இருக்காது, கூடுதல் எரிசக்தியும் பெற முடிகிறது, ஆகவே நம் பயணங்கள் ரசிக்கும்படியாக இருக்கப்போகிறது, கூடவே அடுத்த தலைமுறைகளும் சுகமான உலகில் இயற்கையை ரசித்தபடி வாழ வைக்கப் போகிறோம்.
இதை உறுதி செய்ய முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது இந்த வருட பட்ஜெட் அறிவிப்பு.