சிறுகதை

பசுமை நிறைந்த நினைவுகளே – ராஜா செல்லமுத்து

எழுபதுகளில் கல்லூரியில் படித்த அப்போதய இளைஞர்கள் இப்போது முதியவர்கள்.

ஒன்று கூடிப் பேசலாம் என்று முடிவு செய்தாலும் தேசத்திற்கு ஒரு திசையில் பறந்து சென்று வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.

அவர்களின் செல்போன் நம்பர்களை கண்டுபிடிப்பது பெரும்பாடாய் போனது .

அவர்களைச் சேர்க்கும் யோசனையை பெருமாள் ஏற்றிருந்தார் .

அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் . மனைவி மக்களோடு ஓரளவுக்கு வசதியாக வாழ்ந்து வந்தார் .

அவரின் பேரப்பிள்ளைகள் கூட கல்லூரியை முடித்து விட்டு கலகலப்பாக இருக்கும். அந்த நிகழ்வை பார்த்து தான் பெருமாளுக்கும் யோசனை வந்தது.

நீங்க எல்லாம் இப்ப காலேஜ் படிக்கிறீங்க. நாங்கல்லாம் அந்த காலத்துல காலேஜ் படிச்சவங்க. இன்னும் நாங்க படிச்ச அத்தனை பேரும் நல்ல வேளையில் இருக்கோம். நல்ல முறையில் வாழ்ந்தும் இருக்கோம்.

இப்ப இருக்கிற பசங்க எல்லாம் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகுறது. தப்பு செய்றது. இதெல்லாம் எங்க காலத்துல இல்ல. நாங்க எல்லாம் வீட்ல இருக்கிறவங்க, பெரியவங்க அவங்களுடைய கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் தான் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழுறம்.

உங்க அப்பா கொடுத்து வச்சவன் . காலேஜ் முடிச்சிட்டான். நீயும் படிச்சிட்டு தயாராகிக்கிட்டு இருக்கே. இந்த ஒழுக்கமான விதை நான் போட்டது என்று சாென்னார் பெருமாள் .

தாத்தா நீங்க படிக்கும் போது, உங்க கூட படிச்ச பிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா? என்று பெருமாளின் பேரன் கேட்டபோது

எல்லாருமே இருக்காங்க. அவங்க இன்னும் ஒரு வாரத்துக்கு உள்ள மொத்த பேரையும் கண்டுபிடிச்சு ரியூனியன் வைக்க போறேன் பாரு என்று தன் கல்லூரி கால நினைவுகளைப் பேரனிடம் பெருமையாகப் பேசினார் பெருமாள் .

அவர் சொன்னது போலவே ஒரு வாரத்திற்கு எல்லாம் தன்னுடன் படித்த அத்தனை நண்பர்களின் எண்களை வாங்கி, ரீயூனியனுக்கு ஏற்படச் செய்தார்.

முன் வழுக்கை, பின் வழுக்கை தலையில் நரை, வாழ்ந்து முடித்ததற்கான அடையாளம் என்று வாழ்வின் கடைசிப் படியில் நின்று கொண்டிருக்கும் அத்தனை பேரும் ஒன்று கூடினார்கள்.

அந்த விழாவின் ஏற்பாடு நடந்தது, ஒரு பெரிய நட்சத்திர விடுதியில் ‘

வந்தவர்கள் கனவுகள், தங்கள் குடும்பம், தங்கள் சொத்து மதிப்பு இப்போது இருக்கும் நிலை பேரன் பேத்திகள் குடும்பம் என்று விலாவாரியாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள். அந்த வயது முதிர்ந்த இளைஞர்கள்.

தங்கள் கல்லூரிக் கால நினைவுகளை பேசிப் பேசி சிரித்துக் கொண்டார்கள்.

வயதான குழந்தைகள் பாேல அவர்கள் விளையாடிக் காெண்டிருந்தனர்.

பெருமாளின் பேரன் இதையெல்லாம் படம் பிடித்துக் கொண்டே அவர்களின் இயல்பை ரசித்துக் கொண்டிருந்தான்.

என்ன இது ? தாத்தா குழந்தை மாதிரி ஆயிட்டாரே? என்று நினைத்தவன் வந்திருந்த அத்தனை பேர்களும் உறவாடியதைப் பார்த்து வியந்தான்.

கண்ணீர் ,கவலை, சோகம் காதல் கல்யாணம் என்று ஒவ்வொருவரும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த வயதில் இருந்த அந்தக் கால இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தியது.

5 மணிக்கு ஆரம்பித்த அந்த விழாவானது 9 மணி வரை சென்றது. விசாரிப்புகள், சந்தோஷம், சமிக்கைகள் கணிப்பொறி என்று அத்தனையும் பேசி முடித்த அந்தக்கால கல்லூரி இளைஞர்கள், தன் வயோதிகத்தை மறந்து வாய்விட்டுச் சிரித்து கொண்டார்கள்.

இன்னும் அவர்கள் பிரிவதற்கு ஐந்து நிமிட இடைவெளி இருந்தது.

ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி கட்டியணைத்து கண்ணீரோடு விடைபெற்றனர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தான் பெருமாளின் பேரன் .

இவ்வளவு தூரத்திற்கு இவர்களின் அன்பு சாத்தியமா? என்று பெருமாளின் பேரனுக்கு இதயத்தில் பேரிடியாக இறங்கியது.

அவர்கள் அவரவர் வந்த கார்கள் வண்டிகள் குடும்பம் சொந்த பந்தம் என்று அந்த நட்சத்திர விடுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் ரமணி மட்டும் போகாமல் நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்ற பெருமாளின் பேரன் ,

தாத்தா நீங்க போகலையா ?என்று கேட்டபோது

தம்பி எனக்கு குடும்பம் பிள்ளை குட்டி ஒன்னும் கிடையாது. மனைவி இறந்துட்டாங்க. ஒரே ஒரு பொண்ணு வெளிநாட்டில இருக்கா. என்ன பார்த்துக்கிறதுக்கு யாருமே இல்ல. இப்ப நானு முதியோர் இல்லத்துக்கு தான் போகணும். ஓலா புக் பண்ணி இருக்கேன். இப்ப ஆட்டோ வரும் .அது வந்ததும் நான் முதியோர் இல்லம் தான் போகணும் என்றபோது,

இதற்கு முன்னால் இருந்த சந்தோஷம் ,அரவணைப்பு அத்தனையும் சுக்கு நூறாய் உடைந்து போனது பெருமாளின் பேரனுக்கும்

ரமணியை இறுகத் தழுவிக் கொண்டார் பெருமாள்.

ரமணி என்று பெருமாள் கூப்பிட்டார்:

நீ என்கூடயே இருந்துரு என்று பெருமாள் கேட்டார்.

இல்ல பெருமாள்

ஒரு நாள், ரெண்டு நாள் நல்லா இருக்கும் .அதுக்கப்புறம் கசந்திரும் கூடப்பிறந்தவர்களும் உறவுகளும் சொந்த பந்தங்களுமே வெலகிருவாங்க

நீயும் நானும் தனியா இருந்தா தான் அன்பு கூடும் . உன் கூட இருந்தேன்னா என் மேல உனக்கு எரிச்சல் உண்டாகும் . வேண்டாம் பெருமாள் முதியோர் இல்லத்துக்கே நான் பாேறேன் என்று ரமணி சொன்னபோது

பெருமாளுக்கும் பெருமாளின் பேரனுக்கும் அவர்களை அறியாமலே கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் ரமணி புக் செய்திருந்த ஆட்டோ அவர்கள் முன்னால் வந்து நின்றது.

அடுத்த வருஷமும் இதே மாதிரி சந்திக்கலாம் என்று ரமணி சொல்லிக்கொண்டே ஆட்டோவில் ஏறினார்.

பெருமாளுக்கும் அவர் பேரனுக்கும் இதயம் கனத்தது.ரமணியை ஏற்றிச்சென்ற அந்த ஆட்டோ அவர்களை விட்டுச் சென்று கொண்டிருந்தது.

அந்த ஆட்டோவையே வெறித்துப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்கள், இருவரும்.

Leave a Reply

Your email address will not be published.