செய்திகள் வாழ்வியல்

பசுமை காடு வளர்க்க விதைப் பந்துகளை தயாரித்து விற்கும் பத்து வயது சிறுவன் ரங்கேஷ் வேல் சாதனை


அறிவியல் அறிவோம்


நிலத்தில் குழிதோண்டி மரக்கன்றுகளைப் புதைத்து வளர்ப்பது வழக்கமான நடைமுறை. இந்த மரபை விதைப் பந்துகள் மிகவும் எளிமைப்படுத்துகின்றன. பசுமை மரங்கள் வளர வேண்டிய இடங்களில் இந்த விதைப் பந்துகளை வீசியெறிந்தால் போதும். ஒரு சில தினங்களில் கன்றுகள் தாமாக முளைத்து பசுமை மரங்களாக வளர்ந்துவிடும். இந்த விதைப் பந்துகளை விற்பனைப் பொருளாக்கி புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் ரங்கேஷ் வேல். இவருக்கு வயது 10.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் வர்தா புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது காற்றின் வேகம் தாழாமல் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. நூறு வயதைக் கடந்த எண்ணற்ற மரங்கள் வேரோடு முறிந்தன. இந்த மாபெரும் இயற்கை பேரிடர் சிறுவன் ரங்கேஷை கவலை அடையச் செய்தது. எனவே, அவர் இயற்கையை மீட்டெடுக்கும்படியான முயற்சியில் ஈடுபட விரும்பினார்.

அச்சிறுவனின் பெற்றோர் விதைப் பந்துகள் பற்றி எடுத்துக் கூறினர். மேலும் Kidspreneur என்ற நிறுவனத்தை நாடி பல உதவிகளைப் பெற்றனர். இந்நிறுவனம் சிறு வயதினரை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே, விதைப் பந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்க ஆலோசனை வழங்கியது. அந்தக் காலகட்டத்தில் விதைப் பந்துகளை விற்பனை செய்யும் தொழிலில் குறைவான பேர் மட்டுமே செயல்பட்டு வந்ததால் சிறுவனின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

பின்னாளில் தொடங்கப்பட்டதே Life Seedz’’ நிறுவனம். இந்நிறுவனம் தற்போது சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்குப் பரிசாக வழங்க விதைப் பந்துகளைத் தயாரித்து சப்ளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி வணிக வளாகம், கல்லூரி போன்ற இடங்களில் ஸ்டால்களை அமைத்து விதைப் பந்துகளை விற்பனை செய்கிறது.Life Seeds’’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக பத்து வயது சிறுவன் ரங்கேஷ் வேல் செயல்படுகிறார். அவரின் தங்கை சுவர்ணாம்பிகாவும் சிஇஓ-வாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“வருங்காலத்தில் மரங்களை அதிகளவில் வளர்க்க டிரோன்களைப் பயன்படுத்தி விதைப் பந்துகளை வீசத் திட்டமிட்டுள்ளேன். எங்களின் நிறுவனம் வர்தா புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவும் இயற்கையைப் பேணிக் காக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. நாங்கள் தற்போது எட்டு விதைப் பந்துகளை 50 ரூபாய்க்கும் நான்கு விதைப் பந்துகளை 25 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். எங்களின் பெற்றோர் விதைப் பந்துகள் தயாரிப்பு பணிக்குப் பெரிதும் உதவுகின்றனர்’’ என்று கூறுகிறார் ரங்கேஷ் வேல்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *