ஆர் முத்துக்குமார்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்த பட்ஜெட்டில் அறிவித்தது போல விரைவில்
ரெயில்வே அமைச்சகம் ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரெயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
மலைப் பிரதேசங்கள் மற்றும் பாரம்பரிய ரெயில்கள் ஓடும் இடத்தில் ஹைட்ரஜன் ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக சீமன்ஸ், கும்மின்ஸ், ஹிடாச்சி, பெல் மற்றும் மேதா சர்வோ ஆகிய நிறுவனங்களுடன் ரெயில்வே அமைச்சகம் கடந்தவாரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது.
தற்போது, டீசல் மற்றும் எலக்ட்ரிக் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் பேட்டரிகளை பொருத்தி இயக்கும் பரிசோதனையில் மேதா சர்வோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுதான் ஹைட்ரஜன் ரெயிலின் முதல் மாதிரியாக இருக்கும். இந்த ரயில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்தாண்டு இறுதியில் இயக்க வாய்ப்புள்ளது. ஒரு ஹைட்ரஜன் ரெயில் தயாரிக்க சுமார் ரூ.80 கோடியும் தரை கட்டமைப்புகளுக்கு ஒரு வழித்தடத்துக்கு ரூ.70 கோடியும் செலவாகும் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
3 ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்பட கூறினார்.
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அடுத்த மூன்ற ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறும். அதேபோல், செயற்கைக்கோள் துறையில் இந்தியா இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முன்னேறும்.
நிலக்கரி, டீசல் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்கள் சமீபமாக மின்சாரத்தை கொண்டு இயங்குகிறது. அந்த மின்சார தயாரிப்பும் நமது காற்றுமண்டலத்திற்கு பாதகமானது தான்!
‘நெட் கார்பன் ஜீரோ’ அதாவது மாசு தூசு வெளியிடா வாகனங்கள் இருந்தால் தான் சுவாசித்து வாழ வழி இருக்கும் என்பதை உணர்ந்து இன்று எடுக்கப்பட வேண்டிய பசுமைமய விவகாரங்களை எடுத்து வருகிறோம்.
முதல் கட்டமாக ஓட இருக்கும் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் இயற்கை வளப்பகுதிகளில் இயங்கிட திட்டம் தயாராகி விட்டது. இதன் வெற்றியின் பின்னணியில் கரும்புகை அறவே இல்லா இந்தியாவை 2080–ல் உருவாக்க நாம் முனைப்புடன் களம் இறங்கி விட்டோம் என்பதை உறுதி செய்கிறது.
கடந்த ஆண்டு தான் அல்ஸ்டாம் என்ற நிறுவனம் ஜெர்மனியில் 1500 கிலோ மீட்டருக்கு கிட்டத்தட்ட 140 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தி வெற்றி கண்டது. தற்போது அந்நாட்டில் 15 அதுபோன்ற ரெயில்கள் தயாராகி விட்டது.
சீனாவிலும் 2021–ம் ஆண்டிலேயே சோதனை செய்து வெற்றியை அறிவித்தது.
உலகின் மிகப்பெரிய ரெயில் சேவை திட்டம் கொண்ட நம் நாட்டில் தான் கரும்புகை கக்கும் ரெயில்களின் ஓட்டம் மிக அதிகமாகும்.
மெல்ல நாம் முற்றிலும் மின்சார ரெயில்களுக்கு மாறிவரும் நிலையில் ஹைட்ரஜன் தயாரிப்பிலும் முனைப்புடன் இருக்கிறோம்.
ஹைட்ரஜன் உபயோகம் அதிகரிக்க இருப்பதை உணர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஹைட்ரஜன் தயாரிப்பில் நுழைந்து விட்டோம்.
இந்த ஹைட்ரஜன் வாயு கொண்டு இயங்கும் சாதனங்கள் வெற்றி பெறுமா? என்ற கேள்விக்குப் பதில் பெட்ரோல், டீசலில் உள்ள கார்பன் அமிலம் இல்லாத ஹைட்ரஜன் வாயு எளிதில் நல்ல முறையில் எரியும் திறன் கொண்டது. அப்படி எரியும் சக்தியால் விபத்துக்கள் உருவாகி விடுமே? என்பது தான் இதுவரை இருந்த கவலை!
ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் கொண்டு எரிசக்தி உருவாக்கி, கழிவுப் பொருளாக தண்ணீரையும் பெற வைக்கிறது.
மிகப் பாதுகாப்பான இயந்திரங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் மிக மும்முரமாக உலகெங்கும் நடைபெற ஆரம்பித்து விட்டது.
ஆக அடுத்த சில ஆண்டுகளில் உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் ஹைட்ரஜன் வாகனங்கள் நமக்கு பல சொகுசான பயண அனுபவங்களைத் தர இருக்கிறது.
கரும்புகை வெளியேற்றம் அறவே இருக்காது, கூடுதல் எரிசக்தியும் பெற முடிகிறது, ஆகவே நம் பயணங்கள் ரசிக்கும்படியாக இருக்கப்போகிறது, கூடவே அடுத்த தலைமுறைகளும் சுகமான உலகில் இயற்கையை ரசித்தபடி வாழ வைக்கப் போகிறோம்.
ஹைட்ரஜன் படிப்படியாக ஒரு நிலையான மற்றும் மலிவு ஆற்றல் எதிர்காலத்திற்கான சுத்தமான-ஆற்றல் கலவையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது.
இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
அதே நேரத்தில் நாம் ஹைட்ரஜனை எரிக்கும்போது அது தண்ணீராக மாறிவிடுகிறது. கார்பன் வெளியேற்றத்துக்கு இங்கு இடமில்லை. எனவே பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக ஹைட்ரஜன் இருக்கும் என்று கருதப்படுகிறது.