ஆர் முத்துக்குமார்
2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில்
தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் சாதக பாதகங்கள் அலசி ஆராயப்பட்டு வருவதை ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
இதில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு, மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது ஓராண்டுக்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டது.
மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும். பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிக்கும் வகையில் 7.5% வட்டி வழங்கப்படும். 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.
மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் கடன் வாங்கப்பட்டது. அதில் ரூ. 11,10,546 லட்சம் கோடி அளவுக்கு நடப்புக் கணக்குக்கு செலவுசெய்யப்பட்டது. இந்த ஆண்டு மத்திய அரசு கட்ட வேண்டிய வட்டித்தொகை மட்டுமே 10,79,971 கோடி ரூபாயாகும். இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.
மேலும் உள்கட்டமைப்புக்கு முதலீடு, பசுமை எரிசக்தி, இளைஞர் நலன்கள் உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களை கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு. கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு. விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மானியங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 3,34,339.42 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் 2,70,935.60 கோடி ரூபாயே அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் முக்கியமான செலவுகளை மாநிலங்களே செய்ய வேண்டிய நிலையில், இப்படி நிதி ஒதுக்கீடு குறைவது முக்கியமான மக்கள் நலத் திட்டங்களைப் பாதிக்கும்.
புதிய வரித் திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கான வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் வெறும் .008 சதவீதம் மட்டும்தான்.
இது பலருக்கு நிச்சயம் உதவும் காரணம் அவர்கள் குடும்பங்களின் சேமிப்பு அதிகரிக்கலாம்.
மாதம் 55ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு இது உதவப்போகிறது.
பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்பனின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை குறைக்க பொருளாதாரத்தில் கார்பன் தீவிரத்தை குறைக்க “பசுமை வளர்ச்சி முயற்சிகளில்” அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.
மேலும் 2070க்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் ஆற்றல் மாற்றத்திற்கான முன்னுரிமை மூலதன முதலீட்டிற்காக அரசாங்கம் ரூ.35,000 கோடி பட்ஜெட் ஆதரவை ஒதுக்கியுள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்காக 19,700 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதைப் பற்றியும் சுட்டிக்காட்டி உள்ளார்.
பசுமை ஹைட்ரஜன் கொள்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.19,700 கோடிகள் புதைபடிவ எரிபொருட்களைக் குறைக்க உதவும். 2030-க்குள் 5 MMT பச்சை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கு” என்று அவர் கூறினார்.
பழைய வாகனங்கள் மற்றும் பழைய அரசு ஆம்புலன்ஸ்களை மாற்றுவதற்கு மாநில அரசும் உறுதுணையாக இருக்கும் என உறுதி தந்துள்ளார்.