நாடும் நடப்பும்

பங்கு மார்க்கெட்டில் சாதித்த ஜுன் ஜன்வாலா

பங்கு மார்க்கெட்டில் முதலீடா? அது சூதாட்டம், குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவது போல் என்று நினைக்கப்பட்ட 1985ல் வெறும் ரூ.5000 கொண்டு பங்குகளை வாங்கி விற்க ஆரம்பித்து இன்று நம் நாட்டின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்து இருந்த ராகேஷ் ஜூன் ஜன்வாலா (Rakesh Junjunwala) 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

62 வயதே ஆன அவர் பல்வேறு நோய்களில் அவதிப்பட்ட நிலையில் இறந்து விட்டார். அவரது மனைவி ரேகாவும் பெரிய முதலீட்டாளர் ஆவார்.

பங்கு முதலீட்டாளர் என்று வாழ்ந்த அவர் எட்டியுள்ள சொத்துக்களின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இவர் வாங்கி கைவசம் வைத்திருக்கும் பிரபல நிறுவனங்களின் பங்குகளில் ஸ்டார் ஹேல்த், நஜாரா டெக்னாலஜி, டாடா மோட்டார்ஸ், கனரா வங்கி, டைட்டன், ராலீஸ் இந்தியா போன்ற பல உண்டு.

கடந்த 4 மாதங்களாக ஊடகங்களில் இவர் பற்றிய செய்திகள் வெளிவந்தது ‘ஆகாசா ஏர்’ விமான சர்வீசை துவக்கும் முன் அந்நிறுவனத்தில் 6 % முதலீட்டாளர் என்பது பலருக்கு வியப்பு தருகிறது.

முதலீடு செய்ய அவர் கூறிய காரணங்களில் நம் மண்ணில் விமானத்துறை படு சிறப்பாக செயல்படும் நேரம் வந்து விட்டது, அதை மனதில் கொண்டு தான் இதில் முதலீடு செய்துள்ளேன் என்று கூறியவர் ஆவார்.

உலகமே பார்த்து வியக்கும் வகையில் எங்களது விமான சர்வீசை கொண்டு வர வேண்டும் என்று கூறிய ராகேஷ் எங்கள் நிறுவனம் சிறகு விரிந்து பறக்கவே எங்கள் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்தவர் என்று ‘ஆகாசா ஏர்’ சேர்மன் விணை துவே தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் வாங்கிய பங்குகள் பல 10 மடங்கு உயர்ந்து நல்ல லாபம் ஈட்டியுள்ளது. அதுமட்டுமின்றி இவரது கையிருப்பு பங்குகளின் காரணமாக பல பெரிய நிறுவனங்களில் இயக்குநராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் இவரது தலைமையில் இயங்கும் பல பங்கு வர்த்தகர்களும் இவரது ஆலோசனைகளை பெற்று பல கோடிகளை சம்பாதித்து இருப்பது இவரது புத்தி கூர்மைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் பங்கு முதலீடு என்பது சூதாட்டம் கிடையாது என்ற புரிதல் நம் நாட்டில் பலருக்கு வந்து பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களில் பலர் முதலீடு செய்துவிட்டு அதை எப்போது விற்று விட வேண்டும் என்பது பற்றி புரிதலின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ராகேஷ் தந்துள்ள யோசனை என்ன? ஒரு பங்கு சரியாக விலை ஏற்றம் காணாமல் தவிக்கக் காரணம் என்ன? என்பதை உணர்ந்து அப்பங்குகளை விற்று விட்டு நல்ல பின்பலம் கொண்ட பங்குகளின் முதலீட்டை மாற்றி விட வேண்டும் என்கிறார்.

சாமானியனுக்கு இது புரிந்து செயல்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்யும். மழை வரும் போது மாவு விற்கக் கூடாது அல்லவா?

அது போன்று ஒரு குறிப்பிட்ட துறையில் சரிவு ஏற்பட்டால் அதை சார்ந்திருக்கும் நிறுவன பங்குகளில் சரிவு ஏற்படும்.

இதைக் கண்காணித்து வாங்க நேரத்தைச் செலவு செய்தாக வேண்டும். அதற்கு மாற்று மியூட்சுவல் பண்ட்டுகளில் முதலீடு செய்வது தான்.

ராகேஷ் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் கைவசம் ஒவ்வொரு துறையில் உள்ள பல நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு வங்கி துறை என்றால் பல அரசுடமை வங்கிகளிலும் சில தனியார் வங்கிகளிலும் முதலீடு செய்திருப்பார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் சரிவு கண்டு வந்த வங்கித் துறையில் சமீபமாக லாபகரமாக இயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் வங்கிகளின் வட்டி விகித உயர்வு தான்! அதனால் வங்கி ஈட்டும் வருவாய் அதிகரித்து விடும்.

அந்நிலையில் வீட்டுக்கடன், வாகனக் கடன்கள் அதிகம் தந்துள்ள வங்கிகளின் லாபம் அதிகரிக்கும்.

இப்படி துறைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்துக் கொண்டு முதலீடுகள் செய்தால் தடுமாற்றம் ஏற்பட்டு அசலையும் இழந்து தவிக்க மாட்டோம்.

மொத்தத்தில் ராகேஷ் ஜூன் ஜன்வாலாவின் வருகையால் பல தனிநபர் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்று பங்கு முதலீடுகள் செய்யும் ஆர்வம் வந்தது தான் உண்மை.

அப்படிப்பட்ட புரட்சி நாயகம் இழப்பு நிச்சயம் பேரிழப்பு என்பதால் தான் பிரதமர் மோடியும் அவரது இறப்பைப் பற்றி கேட்டவுடன் அனுதாப செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.