இதுவரை ரூ.5.57 லட்சம் கோடி இழப்பு
நியூயார்க், ஜன. 31–
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நான்காவது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ள நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட 106 பக்க ஆய்வு அறிக்கையில் அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது, கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
11 வது இடத்தில் அதானி
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்தன. இன்று நான்காவது நாளாக பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.
இதன் விளைவாக உலக பணக்காரர் வரிசையில் 2 ஆம் இடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அதானியின் மொத்த சொத்துமதிப்பு 8440 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடியாக) உள்ளது. இந்தப் பட்டியலில் 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 8220 கோடி டாலராக உள்ளது.