சிறுகதை

பக்ரீத் பிரியாணி -மலர்மதி

அது குடிசைகள் நிறைந்த பகுதி. சுல்தானா பேகம் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஒரு குடிசையில் காலம் தள்ளிக் கொண்டிருந்தாள்.

இரண்டாவது பெண் குழந்தை அவள் வயிற்றில் இருக்கும்போது விபத் தொன்றில் அவள் கணவன் அகால மரணமடைந்துவிட்டான்.

அப்போது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள் சுல்தானா பேகம்.

அந்த சமயத்தில் எதிர் குடிசை பாத்திமாதான் உதவினாள்.

அவள் தினமும் பக்கத்து காலனியில் வசிக்கும் சில செல்வந்தர்கள் வீடுகளில் வேலை செய்து வந்தாள். அவளுடைய சிபாரிசில் ஹாஜியார் வீட்டில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள் சுல்தானா பேகம்.

அந்த வருமானத்தில்தான் அவள் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

பெண் குழந்தைகள் இருவரையும் அருகிலிருந்த அரசுப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டிருந்தாள். நாலு எழுத்து தெரிந்து கொள்வதற்காக இல்லை. மதியம் ஒரு வேளை சோறு கிடைக்கும் என்பதற்காகத்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் மற்ற குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

ஹாஜியார் வீட்டில் கொடுத்த பழைய டிரெஸ்களில் இருந்த தையல் பிரிந்துபோன இடங்களை ஊசியும் நூலும் கொண்டு தைத்து ரெடியாக வைத்து விட்டாள். இரண்டு குழந்தைகளுக்கும் பெருநாள் டிரெஸ் ரெடி. தன்னிடம் இருந்த அதிகம் உபயோகிக்காத சேலையைத் துவைத்து காயப்போட்டு மடித்து வைத்து விட்டாள்.

பெருநாள் துணி பிரச்சினை தீர்ந்தது.

இனி பெருநாளுக்கு என்ன சமைப்பது என்று குழம்பிப்போய் அமர்ந்திருந்தபோதுதான், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் மூச்சிறைக்க ஓடி வந்தனர்.

“அம்மா… அம்மா…”

“என்னடி, ஏண்டி இப்படி ஓடி வர்றீங்க?”

“பக்கத்து வீட்டு பர்வீன் வீட்டில பெருநா அன்னிக்கி பிரியாணி பண்ணப் போறாங்களாம்…”

“அதுக்கு என்ன இப்ப?”

“நம்ம வீட்லயும் பிரியாணி பண்ணலாம்மா…”

ஆசையுடன் கேட்கும் பிஞ்சு உள்ளங்களை நோகடிக்க மனமில்லாமல், “சரி, பண்ணலாம்.” என்றாள்.

“ஹைய்யா…” என்று கத்திக் கொண்டே மீண்டும் தெருவில் இறங்கி ஓடினர்.

குழந்தைகளுக்கு வாக்குக் கொடுத்தாகிவிட்டது. இனி எப்படி பிரியாணி சமைப்பது? என்ற கவலையுடன் அமர்ந்தாள் சுல்தானா பேகம்.

நாட்கள் வேகமாக ஓடி, விடிந்தால் பெருநாள் என்ற நிலை வந்ததும் தடுமாறிப் போனாள்.

சிரமத்துடன் பிரியாணிக்குத் தேவையான எல்லா பொருட்களையும் சேர்த்துவிட்டாள். ஒரே ஒரு பொருள்தான் தேவை.

அது –

ஆட்டுக் கறி!

அது விற்கும் விலைக்கு கால் கிலோவும் வாங்க முடியாத நிலை அவளுடையது. சிக்கன் பிரியாணி செய்யலாம் என்றால் குழந்தைகளுக்குப் பிடிக்காது.

என்ன செய்வது?

“யா அல்லாஹ்.. எனக்கு ஏன் இந்த நிலையில் வைத்தாய்? என் குழந்தைகளின் ஒரு சின்ன ஆசைகூட என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லையே…” என்று கலங்கினாள்.

அப்போது –

வாசலில் ஒரு குரல்…

“சுல்தானா அக்கா…”

எழுந்து வெளியே வந்தாள்.

ஹாஜியார் மகன்.

“என்ன தம்பி, இவ்வளவு தூரம்?”

“வாப்பா இதை உங்ககிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.” என்று ஒரு பொட்டலத்தை நீட்டினான்.

அதை வாங்கிக் கொண்டவள், “என்னப்பா, இது?” என்று கேட்டாள்.

“குர்பானி கறி அக்கா…” என்றவாறு அவன் போய்விட்டான்.

அதாவது குர்பானிக்காக அறுக்கப்படும் ஆட்டின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரிக்க வேண்டும். ஒரு பங்கை குர்பானி கொடுப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது பங்கை உற்றார், உறவினர்களுக்கும் மூன்றாவது பங்கை ஏழை எளியோருக்கும் பிரித்து வழங்க வேண்டும்.

அந்த மூன்றாவது பங்கிலிருந்துதான் ஆட்டுக் கறியை சுல்தானா பேகத்துக்கு அனுப்பியிருக்கிறார் ஹாஜியார்.

“யா அல்லாஹ்… சற்று நேரத்துக்கு முன் உன் மீது குறைபட்டேன். என்னை மன்னித்து விடு. எதை, எப்போது, யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவன் நீயே…” என்று சொல்லிக்கொண்டே எழுந்தவள், நமாஸ் படித்து இறைவனுக்கு நன்றி செலுத்த ஆயத்தமானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *