சிறுகதை

பக்ரீத் பாடல் | ப.முகமது ஜமிலுதீன்

“ஏண்டா அலாவுதீன் உன் பாட்டியை அடிக்க போனே? அவுக அழுதுட்டே ஏண்ட்டே சொல்லிட்டு போனாக” என்று அவன் தாய் உசேன்பீ குடிசையின் ஒரு மூலையில் கிழிஞ்ச கைலியை போர்த்தியவாறு காய்ச்சலோடு உட்கார்ந்த மகனிடம் கனிவான குரலில் கேட்டாள்.

“காய்ச்சலோட எவ்வளவு நேரம் சுருண்டு படுத்துகிட்டே இருக்கிறதுன்னு வெளியே போய் நம்ம குடிசைக்கு பக்கத்துலே இருக்கிற மேட்லே உட்கார்ந்திருந்தேன். இரண்டு நாள்ளே வர்ற பக்ரீத் பெருநாள் தினத்லே உசேன் பக்கிரிசா குழுவிலே நான் போய் பாட முடியாமே போயிருமோன்னு கவலையா இருந்தப்போ இந்தப் பாட்டி என் முன்னாலே வந்து, “டேய் ….அலாவுதீன் இரண்டு நாள்லே பக்ரீத் வருது, நீ இஸ்லாமிய மக்க வீடுகள்லே பாடப் போறே. நிறைய காசும் பிரியாணியும் கிடைக்கப் போகுதுன்னு நினைச்சு சந்தோஷமா இருக்காமே . ஏன் இப்படி கப்பலை கவிழ விட்டவன் மாதிரி கன்னத்துலே கைவச்சுக்கிட்டு சோகமா உட்கார்ந்திருக்கேன்னு கிண்டலா கேட்டுச்சு. நான் பதில் பேசல. என்னடாப்பா பதில் பேச மாட்டேங்குறே. பேசுனா வாய்முத்து உதிந்திரும்னு ரொம்பதான் கிராக்கி பண்றேன்னு இன்னும் அதிகமா கேலியா பேசினதும் எனக்கு கெட்ட கோபம் வந்துருச்சு. சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு எந்திருச்சு பாட்டியை அடிக்கப் போனேன். அவுக அழுதுகிட்டே விருட்டுனு போயிட்டாங்க” என்றான்.

“டேய் அலாவுதீன் அவுக என் அத்தாவோட கூடப்பிறந்தவங்க. என் குப்பிடா (அத்தை) அவுக. நாம ரொம்ப கஷ்டத்துலே இருந்தப்போ உதவி செஞ்சவக. நீ அல்லா மேலே பாடி குடும்பத்தை நடத்துகிறதாலே உன் மேலே ரொம்ப பிரியம்டா அவுகளுக்கு. ஓண்ட்டே பேசும்போது அவுகளுக்கு உனக்கு காய்ச்சல்னு தெரியாது. நான் சொன்னப்பபோதான் தெரிஞ்சுகிட்டாங்க”

“சரிம்மா, அதைவிடு. எனக்கு ரொம்ப குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு. உடம்பு வலியை பொறுக்க முடியலே. பக்ரீத் நாள்லே என்னாலே நிச்சயமா பாடமுடியாது. பிரியாணி கேட்டு கேட்டு என் பாசமான தம்பி அன்வர் அழுவானே. நான் எப்படி அவனை சமாதானம் செய்வேன்னு” சொல்லியவாறு படுத்து சுவர் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் தாயும் அழுதாள்.

வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் அவளின் நாலு வயது மகன் மேல் அலாவுதீனுக்கு பிரியம் அதிகம். தன்னால்தான் படிப்பு தொடரமுடியவில்லை. தம்பியையாவது படிக்க வைத்து அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு அளவற்ற ஆசை. அதற்கு இந்த பக்ரீத் பெருநாளைத்தான் அலாவுதீன் மிகவும் நம்பியிருந்தான். பக்கத்து தனியார் பள்ளியில் சிறுவன் அன்வரை சேர்க்க யூனிஃபார்ம் அது இதுன்னு ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. பக்ரீத் தினத்தில் பாடுவதால் அவன் பங்கிற்கு ஐந்நூறு ரூபாய் கிடைக்கும். பாக்கி ஐநூறை குழுத் தலைவர் உசேன் பக்கிரிசாவிடம் கடனாக வாங்கி அன்வரை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தான்.

கடுமையான காய்ச்சலால் அது கனவாகி போனதே என்று அவன் அழுதான். அவன் தாய் உசேன்பீயும் அழுதாள்.

அலாவுதீன் பத்துவரை படித்தவன். அவன் அத்தா கொத்தனராக இருந்தார். உயரமான அப்பார்ட்மெண்ட் கட்டும் பணியில் இருந்தபோது சாரம் முறிந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். குடும்பம் நிர்கதியாய் போகமாலிருக்க அலாவுதீனின் குரல்தான் உதவியது. பள்ளிக்கூடத்தில் அவன் படிக்கும்போது காலையில் நடக்கும் சர்வமத பிரார்த்தனை போது அலாவுதீன் பெரியவர் நாகூர் ஹனிபா பாடல்களை அப்படியே பாடுவான். அதைக் கேட்பவர்கள் பிரமித்துப் போவார்கள். அவர் பாடும் உச்ச குரலில் சிரமமின்றி பாடுவான் அலாவுதீன். மாவட்டக் கல்வி அதிகாரியே இவன் பாட்டைப் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.

கணவன் திடீரென்று இறந்துவிட்டதால் எப்படி வாழப்போகிறோம் என்று இவன் தாய் தவித்தபோது இஸ்லாமியர் வீடுகள் முன் பாடும் உசேன் பக்கிரிசா இவன் குரல்வளத்தை கேள்விப்பட்டு அவர் குழுவில் இவனை விரும்பி சேர்த்துக்கொண்டார். படிக்க முடியாமல் போய்விட்டது.

நாளுக்கு அறுபது ரூபாய் வரை வருமானம் வந்தது. காரை வீட்டிலிருந்து கூரை வீட்டிற்கு மாறினார்கள். இலவச அரிசியும் அலாவுதீனின் வருமானமும் அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தன் மகன் குணமாக வேண்டும். பக்ரீத் தினத்தில் அவன் பாட வேண்டும். சிறுவனை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்ற நினைவில் அல்லாவை அவள் வேண்டிக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த அவள் குடிசை வாசல் முன் பஸ் போன்ற ஒரு பெரிய வாகனம் வந்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டாள் உசேன்பீ. இன்னும் அவள் ஆச்சர்யப்படும் வகையில் ஒரு நர்ஸ் வெள்ளை உடையில் அவள் வீட்டிற்குள் நுழைந்து “இது பாடகர் அலாவுதீன் வீடுதானே” என்று சிறிது சத்தமாகவே கேட்டாள். இது படுத்திருந்த அலாவுதீனுக்கு கேட்கவே சட்டையோடு படுத்திருந்த அவன் தளர்வாக எழுந்து “ஆமாங்க, நான் தான் அலாவுதீன்” என்றான் ஈனக்குரலில்.

“நாங்க டவுன்லே இருக்கிற அல்அமீன் தர்ம ஆஸ்பத்திரியிலிருந்து எங்களின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் இங்கே வந்திருக்கிறோம். நீங்க அங்கே வந்தீங்கன்னா வாகனத்திலே இருக்கிற டாக்டர் அபூபக்கர் உங்களுக்கு சிகிச்சை செய்வார்” என்றாள்.

டாக்டர் அவனை பரிசோதித்து ஊசி போட்டார். பின் இரண்டு நாளுக்கான மாத்திரைகள் கொடுத்து, “இதைச் சாப்பிட்டிற்கு பின் சாப்பிடுங்க. சரியாயிரும்” என்று கனிவோடு சொன்னார்.

அதிசயத்திலும் அதிசயமாய் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் எப்படி இவன் குடிசைக்கு வந்தது என்ற பலத்த கேள்வியோடு வீட்டிற்குள் நுழைந்தான் அலாவுதீன். தாயிடம் விவரம் சொன்னதும் முன்பே அதிசயித்தவள், இன்னும் அதிகமாக அதிசயித்து போனாள்.

பின் அவள் “கொஞ்சம் இரு அலாவுதீன். நான் அரிசி கஞ்சியை ஆக்கி தர்றேன். அதை குடிச்சிட்டு மாத்திரையை சாப்பிடு. அல்லா உன்னை குணப்படுத்துவான்” என்று கூறினாள்.

அவன் மாத்திரை சாப்பிட்டு படுத்தவுடன் மருத்துவ வாகனம் தன் குடிசைக்கு வந்த அதிசயத்தை தன் குப்பியிடம் சொல்ல வேண்டும் என்று கிளம்பினாள். வெளியே தெருவில் அவள் மகன் சிறுவன் அன்வர் தன் சக நண்பர்களான அழகேசன், அமானுல்லா, அந்தோணியிடம் “டேய் போன ரம்ஜான் மாதிரி என் அண்ணன் பக்ரீத் அன்னக்கியும் நிறையப் பிரியாணி கொண்டு வருவார். நீங்க எல்லாம் என் வீட்டுக்கு வந்து பிரியாணி சாப்பிடணும்னு” என்று அந்த பாலகன் குதித்துக் கொண்டு சொன்னது உசேன்பீ மனதை மிகவும் பாதித்தது. “அல்லா விவரம் அறியா இந்த சிறுவனின் ஆசையை தீர்த்து வை” என்று இறைவனிடம் கெஞ்சியவாறு குப்பியின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

இவளைப் பார்த்ததும் குப்பி, அவராகவே “என்ன உசேன்பீ ஆஸ்பத்திரி பஸ் உன் வீட்டுக்கு வந்திருக்குமே! உன் மகன் ஊசி போட்டுகிட்டானா?” என்று கேட்டதும் உசேன்பீக்கு இது குப்பியின் ஏற்பாடு தான் என்று உடனே புரிந்தது. குப்பியை பரிவோடு பார்த்த உசேன்பீ, “எப்படி குப்பிமா உங்களுக்கு இந்த ஏற்பாடு செய்ய முடிஞ்சது” என்று ஆவலோடு கேட்டாள். “எனக்கு ஒரு மாசம் முன்னாலே உன் மகனுக்கு வந்திருக்கிற மாதிரி காய்ச்சல் வந்துச்சு. டவுன்லே பெரிய கடை வீதியிலே கூலி வேலை பார்க்கிற என் மகன் தான் என்னய அங்கே கூட்டிட்டு போனான். எல்லா சமூகத்தினருக்கு உதவுற மாதிரியான இந்த அல்அமீன் தர்ம ஆஸ்பத்திரியை ஜவுளிக்கடை அதிபர் மன்சூர் அலிதான் சில மாசங்களுக்கு முன் கட்டியிருக்கிறாரு. பக்கத்து கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்யனும்னு ரொம்ப ரூபா செலவழிச்சு இந்த நடமாடும் ஆஸ்பத்திரி வாகனத்தையும் வாங்கியிருக்காரு. உன் மகன் காய்ச்சலாலே பக்ரீத் அன்னக்கி பாடாமே போயிருக்கக்கூடாதுன்னுதான் பீமா நகர்லே இருக்கிற இந்த ஆஸ்பத்திரிக்கு நடந்தே போய் விவரத்தை சொன்னேன். உடனே என்னையும் அந்த வாகனத்துலே ஏத்திக்கிட்டு உன் குடிசைக்கு அவுங்க வந்தாங்க. என் மேலே இருக்கிற கோபத்துலே உன் மகன் சிகிச்சை செஞ்சுக்கிறமாட்டேன்னு அடம் பிடிச்சிருவான்னுதான் நான் இதை ரகசியமா செஞ்சேன்” என்றதும் உசேன்பீ கண்ணீர் மல்க குப்பிக்கு நன்றி கூறினாள்.

வீட்டிற்கு வந்த உசேன்பீவிற்கு டாக்டரின் சிகிச்சையால் மகனின் காய்ச்சல் குணமாகுமோ, ஆகாதோ என்ற சந்தேகம் திடீர்னு வந்ததால் அன்று இரவு முழுதும் தூக்கத்தை இழந்து தவித்தாள்.

மறுநாள் காலையில் “காய்ச்சலும் உடம்பு வலியும் முழுசா போயிடுச்சுமா” என்று மகன் திருப்தியோடு கூறினான். அதன்பின்தான் அவளுக்கு நிம்மதி திரும்பியது.

பக்ரீத் தினத்தன்று எப்போது எங்கே வர வேண்டும் என்று கேட்பதற்கு குழுத் தலைவர் உசேன் பக்கிரிசாவை பார்க்க கிளம்பும்போது அவன் குழுவில் பாடும் மற்ற பாடகர்களான அஜ்மல், காதர், கரீம் ஆகிய மூவரும் சோக முகத்துடன் அவன் முன் வந்து நின்றதோடு அவர்களில் மூத்தவரான அஜ்மல் “தம்பி அலாவுதீன் நம்ம குழுத் தலைவர் உசேன் பக்கிரிசா மவுத் (இறப்பது) ஆயிட்டார்” என்று சொன்னார். அதைக் கேட்டதும் அலாவுதீன் நிலைகுலைந்து போனான். “எப்படீங்க இறந்தார்” என்றான்.

“மூணு நாளைக்கு முன்னாலே அவர் நான் மேலப்பாளையத்தில் இருக்கிற என் தம்பி வீட்டுக்கு போறேன். பக்ரீத் பெருநாளுக்கு முந்தினநாள்தான் வருவேன். நீங்க அதுவரை வீட்லே இருங்கன்னு எங்ககிட்டே சொல்லிட்டு போனவர் அங்கே போனதும் ஒரு விபத்துலே சிக்கி இறந்துட்டார்.

அவரை அங்கேயே அடக்கம் செஞ்சுட்டாங்க. இப்போ தான் எனக்கு தகவல் சொல்லி அனுப்பிச்சாங்க” என்று முடித்தார் அஜ்மல்.

“இந்த நிலமையிலே நாம என்னங்க செய்யணும்னு” என்று படபடப்புடன் கேட்டான் அலாவுதீன் .

அவனைப் பார்த்த அஜ்மல் “தம்பி நீதான் நம்ம குழுவில் படிச்சவன். அவர் பாடின வார்த்தைகள் எல்லாம் உனக்குத்தான் மனப்பாடம். அதனாலே நீதான் நம்ம குழுவுக்கு தலைமை தாங்கணும். அதோட உசேன் பக்கிரி அய்யா சில தப்புகள் செஞ்சார். தனக்கு பெயர் மழுங்கிடுமோன்னு உன்னை பெரியவர் நாகூர் ஹனிபா பாடல்களை பாட விடாமல் செய்தார். அதோட வருமானத்துலே நமக்கு குறைச்சு குறைச்சு பங்கு கொடுத்தார்” என்றார்.

அலாவுதீன் சட்டென குறுக்கிட்டு, “இறந்தவரைப் பத்தி தப்பா பேசக்கூடாது. நீங்க விரும்புறதாலே நான் தலைமை தாங்கிப் பாட்றேன்.

பக்ரீத் நாள் காலையிலே எட்டு மணிக்கு நீங்க சுல்தான் நகர்லே இருக்கிற ஜூம்மா பள்ளிவாசலுக்கு வந்திருங்க. பக்ரீத் சிறப்புத் தொழுகையை முடிச்சதும் நாம இஸ்லாமியர் வீடுகளுக்கு முன் பாட கிளம்பிருவோம்” என்று சொன்னதை கேட்டதும் வந்த மூவரும் திருப்தியோடு திரும்பிச் சென்றார்கள்.

அலாவுதீனின் நாகூர் ஹனிபா பாடல்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு இருந்தது. கூடுதலான சன்மானமும் நிறைய பிரியாணி பொட்டலங்களும் கிடைத்தன. அதோடு அலாவுதீனின் வாழ்க்கையைப் புரட்டி போடும் சம்பவமும் நிகழ்ந்தது. ஒரு வீட்டின் முன் அலாவுதீன் “இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” என்ற பாடலை உச்சஸ்தாயியில் உணர்ந்து பாடுவதை கேட்டவுடன் இளைஞன் ஒருவன் கையில் ஒரு பெரிய செல்லோடு. அலாவுதீனை நெருங்கி, “தம்பி இந்த பாடலையும் இன்னும் இரண்டு, மூணு நாகூர் ஹனிபா அய்யா பாடல்களையும் இந்த செல்போன் பக்கத்திலே வந்து அதைப் பார்த்து பாடுங்க” என்றான்;

பாடினான் அலாவுதீன்.

பாடி முடித்தவுடன் நிறைய சன்மானம் கொடுத்ததோடு, அவனுடைய பெயரையும், அவன் வீட்டுக்கு வருகிற வழியையும் கேட்டு ஒரு நோட்டில் குறித்துக் கொண்டான் அந்த இளைஞன்.

மதியம் இரண்டு மணிக்கு சுமக்க முடியாத அளவிற்கான பிரியாணி பொட்டலங்களுடனும் கையில் அவனின் சமபாதி பங்கான எழுநூறு ரூபாயுடன் தன் குடிசைக்கு திரும்பினான். தன் தம்பியை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முன்னூறு ரூபாய் குறைகிறது என்றாலும் கிடைத்த அதிகமான பிரியாணி அவனுக்கு நிறைவை தந்தது. அவன் வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் குருசாமி, பெரியசாமி, அந்தோணிசாமி என்பவர்களோடு அந்த குடிசைப் புறத்தில் வாழும் அத்தனைபேர் வீட்டிற்கும் பிரியாணி பொட்டலங்கள் அவனே எடுத்துச் சென்று வழங்கி அவர்களை மகிழ்வித்தான்.

இந்த நேரம் அவன் குடிசை முன் ஒரு டூவீலர் வந்து நின்றது. இவன் பாடல்களை செல்போனில் பதிவு செய்த இளைஞன் டூவீலரிலிருந்து இறங்கி வந்தான். வந்தவன், “அலாவுதீன் உங்க பாடல்களை கேட்டு கீ போர்டு வாசிப்பவரும் நான் கிடார் வாசிக்கும் எங்க அமீர் இஸ்லாமிய இசைக்குழு தலைவருமான தமீம் முகமது பிரமித்துப் போனார். இன்னக்கி அன்சாரிபாளையத்தில் நடக்கப்போற பக்ரீத் இசை நிகழ்ச்சியின் பிரதான பாடகர் நீங்கதான். சன்மானம் ஆயிரம் ரூபாய். உங்க ஜிப்பாவின் இரண்டு பைகளும் நிரம்பி வழியிற மாதிரி ரசிகர்களும் சன்மானம் கொடுப்பார்கள்” என்றான்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த உசேன்பீ உனக்கு இப்படி எல்லாம் வாய்ப்பு கிடைப்பதற்கு காரணம் என் குப்பிதான். அவள் தான் உன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் என்றாள்.

அதைக்கேட்டதும் அலாவுதீன் தன் பாட்டி மேல் அநாவசியமாக கோபப்பட்டதை நினைத்து கண்கலங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *