செய்திகள்

பக்ரீத்: எடப்பாடி, ஓ.பி.எஸ். வாழ்த்து

சென்னை, ஜூலை 31–

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம் மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

இறைவனின் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பதே வாழ்வின் மகத்தான நெறி என்பதை உணர்த்தும் ‘பக்ரீத்’ என்னும் தியாகத் திருநாளில், அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எங்களது மனம் கனிந்த ‘பக்ரீத்’ திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைத்தூதர் இப்ராஹிம் தனது அன்பு மகன் இஸ்மாயிலை, இறைவன் தனக்குக் கட்டளையிட்டவாறு பலியிடத் துணிந்ததையும், இறைவார்த்தைக்கும், தனது தகப்பனின் ஆணைக்குப் பணிந்து, தானே பலியாக சம்மதித்த இஸ்மாயிலின் பணிவையும் இந்த நாளில் நாம் நினைவில் கொள்ளும்போது, நம்மையே நாம் தூய்மையாக்கிக் கொள்ள அழைக்கப்படுகிறோம். அப்படிப்பட்ட போற்றுதலுக்கு உரிய ‘பக்ரீத்’ திருநாளில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பும், அமைதியும், நல்லிணக்கமும் நிலவ எங்கள் பிரார்த்தனை உரித்தாகுக.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா ஆகியோரது வழியில், அனைவருக்கும் ‘பக்ரீத்’ தியாகத் திருநாள் வணக்கத்தையும், வாழ்த்தையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *