திருப்பதி, மார்ச் 06–
பக்தர்கள் கூட்டத்தை கையாளுவது குறித்து அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை , திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு, கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜனவரி 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கேட்ட அயோத்தி
தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஜனவரி 23 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வந்ததால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம் திருமலையில் உள்ள பிரபலமான வெங்கடேஸ்வரா கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம், பக்தர்களை கையாளுவது குறித்து ஆலோசனை கேட்டுள்ளனர்.